மைசூரு மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் கைதான 5 பேருக்கும் 10 நாட்கள் போலீஸ் காவல்


மைசூரு மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் கைதான 5 பேருக்கும் 10 நாட்கள் போலீஸ் காவல்
x
தினத்தந்தி 30 Aug 2021 2:14 AM IST (Updated: 30 Aug 2021 2:14 AM IST)
t-max-icont-min-icon

மைசூரு மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் கைதான 5 பேருக்கும் 10 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

மைசூரு;

மாணவி கூட்டு பலாத்காரம்

  மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் லலிதா திரிபுரா பகுதியில் கடந்த 24-ந்தேதி மர்மகும்பல், காதலனை தாக்கி கல்லூரி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த கும்பலை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

  மேலும் மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதாவது மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் விசாரணை தீவிரமாக நடந்து வந்தது.

5 பேர் கைது

  இந்த நிலையில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் சிறுவன் உள்பட 5 பேரை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். கைதான 5 பேரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் 5 பேரையும் திருப்பூரில் கைது செய்து மைசூருவுக்கு கொண்டு வந்திருந்தனர். அவர்கள் 5 பேரிடம் மாணவி பலாத்காரம் செய்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

  போலீஸ் விசாரணையில், நண்பர்களான 5 பேரும் வெவ்வேறு கூலித்தொழில்கள் செய்து வந்ததும், சம்பவத்தன்று தங்களது வேலைகளை முடித்துவிட்டு 5 பேரும் ஒன்று சேர்ந்து லலிதாதிரிபுரா பகுதியில் மது அருந்தியுள்ளனர். அப்போது அங்கு நின்று பேசி கொண்டிருந்த காதல் ஜோடியை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். பணம் கொடுக்க மறுத்ததால் காதலனை தாக்கி மாணவியை புதருக்குள் தூக்கிச் சென்று கூட்டு பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

10 நாட்கள் போலீஸ் காவல்

  இந்த வழக்கில் விசாரணை பாதிக்ககூடாது என்பதற்காக கைதான 5 பேரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர். இதைதொடர்ந்து நேற்றுமுன்தினம் இரவு 5 பேரும் மைசூரு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

  அப்போது கோர்ட்டில் போலீசார் விசாரணை நடத்த அனுமதி கேட்டனர். அப்போது நீதிபதி கைதான 5 பேரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார். இதையடுத்து 5 பேரையும் போலீசார் தங்கள் வசம் எடுத்து கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, கைதானவர்களில் ஒருவர் கொலை வழக்கில் சிறை சென்று வெளியே வந்துள்ளார். மற்ற 4 பேரும் சந்தன மர கடத்தல் வழக்கில் கைதாகி சிறை சென்று கடந்த ஜனவரி மாதம் தான் வெளியே வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர்கள் மைசூருவுக்கு வரும் போதெல்லாம் தொடர்ந்து கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

மேலும் 2 பேருக்கு...

  விசாரணையில், மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் 5 பேருடன் மேலும் 2 பேருக்கு ெதாடர்பு இருப்பதாகவும், அதாவது 7 பேர் சேர்ந்து தான் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

  இந்த விசாரணையை தொடர்ந்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் மேலும் 2 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story