கடத்த முயன்ற மர்ம நபரின் கையை கடித்து தப்பிய சிறுவன்
உப்பினங்கடி அருகே கடத்த முயன்றபோது மர்ம நபரின் கையை கடித்து சிறுவன் ஒருவர் தப்பினான். அவனது சாமர்த்தியத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
பெங்களூரு:
பள்ளிக்கூட மாணவன்
தட்சிண கன்னடா மாவட்டம் உப்பினங்கடி டவுன் லட்சுமிநகரில் வசித்து வருபவன் அப்துல்லா(வயது 12). இச்சிறுவன் உப்பினங்கடி புறநகர் பகுதியில் உள்ள மதரசா பள்ளியில் படித்து வருகிறார். தற்போது ஆன்லைன் வகுப்பு நடந்து வருவதால், வீட்டில் இருந்தபடியே அப்துல்லா படித்து வருகிறார். நேற்று முன்தினம் இவருக்கு தேர்வு நடந்தது. நேற்று காலையில் தேர்வு எழுதிய விடைத்தாளை எடுத்துக்கொண்டு அப்துல்லா சைக்கிளில் தனது பள்ளிக்கூடத்துக்கு சென்றான்.
அங்கு ஆசிரியர்களை சந்தித்து விடைத்தாளை சமர்ப்பித்துவிட்டு பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே நடந்து வந்து கொண்டிருந்தான். அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர்கள், அப்துல்லாவை குண்டுக்கட்டாக தூக்கி கடத்த முயன்றனர். அந்த சந்தர்ப்பத்தில் தன்னை தூக்கி மர்ம நபரின் கைகளை அப்துல்லா பயங்கரமாக கடித்துவிட்டான். இதனால் வலி தாங்க முடியாமல் அவனை மர்ம நபர்கள் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். இதனால் மர்ம நபர்களிடம் இருந்து அப்துல்லா தப்பினான். பின்னர் வீட்டுக்கு சென்ற மாணவன் அப்துல்லா, தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தான். உடனடியாக அவர்கள் இதுபற்றி புத்தூர் போலீசில் புகார் செய்தனர்.
பாராட்டு
புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். தன்னை கடத்த முயன்ற மர்ம நபர்களிடம் இருந்து பள்ளிக்கூட மாணவன் ஒருவன் தனது சாமர்த்தியத்தால் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் அந்த மாணவனை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
Related Tags :
Next Story