வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரை திட்டியது ஏன்; முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் விளக்கம்


வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரை திட்டியது ஏன்; முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் விளக்கம்
x
தினத்தந்தி 29 Aug 2021 9:00 PM GMT (Updated: 29 Aug 2021 9:00 PM GMT)

வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரை திட்டியது ஏன்? என்று முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

பெங்களூரு:

போலீசாருக்கு கண்டிப்பு

சாலைகளில் ஆவணங்கள் சரிபார்ப்பு என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் வசூலிக்க கூடாது என்று சமீபத்தில் உள்துறை மந்திரி அரக ஞானேந்திரா, போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் மதனபள்ளி சாலையில் சீனிவாசப்பூரில் இருந்து வரும் வாகனங்களை தடுத்து நிறத்தி ஆவணங்கள் சரிபார்ப்பு என்ற பெயரில் போலீசார் பணம் வசூலிப்பதாக விவசாயிகள் சீனிவாசப்பூர் எம்.எல்.ஏ.வும், முன்னாள் சபாநாயகருமான ரமேஷ்குமாரிடம் புகார் செய்தனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரமேஷ்குமார் எம்.எல்.ஏ. அவ்வழியாக காரில் வந்தார். ரமேஷ்குமார் காரில் இருப்பதை அறியாத போலீசார், கார் டிரைவரை அழைத்து ஆவணங்களை கொண்டு வரும்படி எச்சரித்தனர். அத்துடன் ஆவணங்கள் இல்லை என்றால் பணத்தை கொடுத்து விட்டு செல்லும்படி கட்டாயப்படுத்தினர்.

இதை பார்த்துக் கொண்டிருந்த ரமேஷ் குமார், ஆத்திரம் அடைந்து போலீசாரை சரமாரியாக கேள்வி கேட்டு திட்டினார். ‘‘நீங்கள் லஞ்சம் வாங்குவது உங்கள் பிள்ளைகளை பாதிக்கும். தேவையின்றி வாகனங்களை தடுத்து நிறுத்தக்கூடாது. இது கீழ்த்தரமான செயல்’’ என்று கூறி போலீசாரை கண்டித்தார். பின்னர் அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். இதற்கிடையே இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

ரமேஷ்குமாருக்கு கடிதம்

  இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போலீஸ் அதிகாரி ஒருவர், ரமேஷ்குமாருக்கு கடிதம் எழுதினார். வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டத்தை வாபஸ் பெற சட்டசபையில் வலியுறுத்துமாறு கூறி கோபத்தை வெளிப்படுத்தினார். இதுகுறித்து ரமேஷ்குமார் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
  நான் ஊரில் இருந்து பெங்களூரு வந்தபோது எனது காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். என்னை பார்த்ததும் செல்லுமாறு கூறினர். ஆனால் மற்றவர்களின் கார்களை நிறுத்தி சோதனை செய்தனர். நான் அதை கேட்காமல் செல்வது சரியல்ல என நினைத்து, போலீசாரிடம் ஏன் இவ்வாறு சோதனை செய்து தொந்தரவு கொடுக்கிறீர்கள் என்று கேட்டேன். அவர்களை நான் திட்டவில்லை.

  ஒரு மக்கள் பிரதிநிதியாக நான் அதை பார்த்து கொண்டு செல்ல முடியாது. போலீசாரை நான் குறைத்து பேசவில்லை. கண்ட இடங்களில் சோதனை செய்வதால் வாகனங்களில் செல்பவர்கள் தொந்தரவுக்கு ஆளாகிறார்கள். இதை நான் கோபமாக வெளிப்படுத்தினேன். போலீசார் எனக்கு எதிரிகள் இல்லை. அவர்களுக்கு ஆதரவாக சட்டசபையில் பேசியுள்ளேன். அதனால் நான் போலீசாருக்கு எதிரானவன் என்று யாரும் என்னை சித்தரிக்க வேண்டாம்.
  இவ்வாறு ரமேஷ்குமார் கூறினார்.

Next Story