வெளிநாட்டில் இருந்து பரிசு பொருட்கள் வந்துள்ளதாக கூறி சேலம் வாலிபரிடம் ரூ.39 ஆயிரம் மோசடி-சைபர் கிரைம் போலீசார் விசாரணை


வெளிநாட்டில் இருந்து பரிசு பொருட்கள் வந்துள்ளதாக கூறி சேலம் வாலிபரிடம் ரூ.39 ஆயிரம் மோசடி-சைபர் கிரைம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 29 Aug 2021 9:27 PM GMT (Updated: 29 Aug 2021 9:27 PM GMT)

வெளிநாட்டில் இருந்து பரிசு பொருட்கள் வந்துள்ளதாக கூறி சேலம் வாலிபரிடம் ரூ.39 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:
வெளிநாட்டில் இருந்து பரிசு பொருட்கள் வந்துள்ளதாக கூறி சேலம் வாலிபரிடம் ரூ.39 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிநாட்டில் பரிசு
சேலம் மாவட்டம் காடையாம்பட்டியை சேர்ந்தவர் ஜோசப். இவருடைய மகன் சமாதானபிரபு (வயது 24). கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவரது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் ரவீந்திரன் என்பவர் நண்பராக இணைந்துள்ளார். பின்னர் அவர் சமாதான பிரபுவின் வாட்ஸ்-அப் எண்ணை வாங்கி அடிக்கடி குறுந்தகவல் (மெசேஜ்) அனுப்பி வந்துள்ளார்.
இதனிடையே, வெளிநாட்டை சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும், ஏழை கிறிஸ்தவ குடும்பத்தை அடையாளம் காட்டினால் உங்களுக்கு பரிசு அளிக்கப்படும் என்று சமாதான பிரபுவிடம், ரவீந்திரன் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அடுத்த சில நாட்களில் மற்றொரு நபர், சமாதானபிரபுவை செல்போனில் தொடர்பு கொண்டு, பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், வெளிநாட்டில் இருந்து உங்களுக்கு பரிசு வந்துள்ளதாகவும், அதனை டெலிவரி செய்ய சர்வீஸ் கட்டணமாக ரூ.39 ஆயிரம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ரூ.39 ஆயிரம் மோசடி
இதையடுத்து அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்கில் 2 தவணைகளாக சமாதானபிரபு ரூ.39 ஆயிரம் செலுத்தி உள்ளார். ஆனால் பணம் செலுத்தி பல நாட்கள் ஆன பிறகும் பரிசு பொருட்கள் வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சமாதானபிரபு இது பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவிடம் புகார் செய்தார். இதையடுத்து இந்த மோசடி குறித்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கைலாசம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மோசடியில் ஈடுபட்டது அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் சமாதானபிரபு பணம் செலுத்திய வங்கி கணக்கு மூலம் மோசடி நபர்களின் பெயர், விவரத்தை போலீசார் சேகரித்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story