கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் சாவு


கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் சாவு
x
தினத்தந்தி 30 Aug 2021 5:58 AM IST (Updated: 30 Aug 2021 5:58 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக இறந்தார்.

செங்குன்றம்,

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு விநாயகபுரத்தை சேர்ந்தவர் முரளிதரன் (வயது 53). இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் பிரனேஷ் (16). இவர் திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர் வேல்சரவணன் என்பவருடன் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் கிருஷ்ணா கால்வாயில் தொட்டிக்கலை என்ற இடத்தில் குளிக்க சென்றார்.

அப்போது கால்வாயில் குளித்து கொண்டிருந்த இருவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். அங்கு இருந்த பொதுமக்கள் உடனடியாக விரைந்து செயல்பட்டு இருவரையும் காப்பாற்ற முயன்றனர். அவர்களில் வேல்சரவணனை மட்டும் பொதுமக்கள் காப்பாற்றினார்கள். பிரனேஷ் கிருஷ்ணா கால்வாயில் மூழ்கினார்.

உடல் மீட்பு

இது குறித்து பொதுமக்கள் செவ்வாப்பேட்டை போலீசாருக்கும், திருவூரில் உள்ள தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசாரும், தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து பிரனேஷை தீவிரமாக தேடினர்.

இரவு நேரமானதால் மாணவனை தேடும் முயற்சி கைவிடப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று போலீசார் தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் உதவியுடன் பிரனேசை தீவிரமாக தேடினார்கள். பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தண்ணீர் முழுவதுமாக நிறுத்தப்பட்டு தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

நேற்று மாலை தொட்டிக்கலை அருகே மரக்கிளையில் சிக்கி இருந்த பிரனேஷ் உடலை தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story