பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது
பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்று வெலிங்டன் ராணுவ கல்லூரியில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் பேசினார்.
ஊட்டி
பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்று வெலிங்டன் ராணுவ கல்லூரியில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் பேசினார்.
கலந்துரையாடல் நிகழ்ச்சி
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் 77-வது பேட்ச் முப்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கலந்துகொண்டு பேசியபோது கூறியதாவது:-
பயங்கரவாதத்திற்கு எதிரான நமது அணுகுமுறை உள்நாட்டின் வடக்கு பகுதியிலும் செயல்படுத்தப்படுகிறது. பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது. மேலும் பழைய அனுபவங்களில் புதிய பாடம் கற்று எதையும் எதிர்கொள்கிறோம். அந்த வகையில் ஆப்கானிஸ்தானில் சூழல் மாறி வருகிறது. அதை எதிர்கொள்ள ஒவ்வொரு நாடும் இன்று புதிய வழிமுறைகளை வகுக்க வேண்டி உள்ளது. அதை கருத்தில் கொண்டுதான் குவாட் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
சீர்திருத்தம்
மேலும் உடனடியாகவும், விரைவாகவும் நாட்டின் பாதுகாப்பு கொள்கை சீர்திருத்த திட்டங்களை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. ராணுவம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து தீர்வு காணும் வகையில் ஆலோசனை வழங்க முப்படைகளின் தலைமை தளபதி நியமனம் மற்றும் ராணுவ விவகாரங்கள் துறை செயல்பட்டு வருகிறது. ராணுவ கட்டமைப்பு சீர்திருத்தம் வேகமாக நடைபெற்று வருகிறது.
மறுசீரமைப்பு
அதே நேரத்தில் இந்திய படைகள் ஒருங்கிணைந்த திட்டங்கள், கோட்பாடுகளை மேம்படுத்தி இணைந்து போராட வேண்டும். அதில் ராணுவ தலைமையகங்கள் மறுசீரமைப்பு என்பது மிகவும் முக்கியமானது ஆகும். அனைத்து பகுதிகளிலும் ராணுவத்தின் வலிமையை அதிகரிக்கவும், முடிவெடுப்பதில் பரவலாக்கத்தை கொண்டுவரவும் திட்டம் உள்ளது. இதற்கு டி.ஜி.எம்.ஓ. மற்றும் டி.ஜி.எம்.ஐ. ஆகிய பொறுப்புகள் உருவாக்கப்பட்டதை உதாரணமாக கூற முடியும்.
இந்த தலைமை அளவிலான பொறுப்புகளின் ஒருங்கிணைப்பு செயல்பாடு திட்டமிடலில் மிகுந்த துல்லியத்தை கொண்டு வரும். மேலும் ஒருங்கிணைந்த போர் குழு (ஐ.பி.ஜி.) மூலம் விரைவாக முடிவெடுக்க வழி ஏற்பட்டு உள்ளது. இந்த குழு புதிய பிரிவாக எதிரிகளுடன் போரிட உருவாக்கப்பட்டு உள்ளது. தேச பாதுகாப்பில் பெண் அதிகாரிகளின் பங்களிப்பை மேம்படுத்துவதில் தவறவிட்ட வாய்ப்பை பயன்படுத்தும் நிலை உருவாகி உள்ளது.
உள்நாட்டு கொள்முதல் உயர்வு
ராணுவத்தை நவீனப்படுத்தும் வகையில் ரபேல், லைட் யூட்டிலிட்டி ஹெலிகாப்டர், கவச வாகனங்கள், துப்பாக்கிகள் உள்பட நவீன கருவிகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. அதுபோல் வான் பாதுகாப்பிலும் நவீனமயமாக்கல் நடைபெற்று வருகிறது. பிரதமரின் தொலைநோக்கு பார்வையான ‘ஆத்மநிர்பார் அபியான்’ திட்டத்தின் கீழ் பாதுகாப்புத்துறையில் பல முன்னேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
ராணுவ பாதுகாப்பில் எச்.ஏ.எல். நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு சுமார் ரூ.50 ஆயிரம் கோடிக்கு ஆர்டர் கிடைத்துள்ளது.
பாதுகாப்பு நவீனமயமாக்கலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் உள்நாட்டு கொள்முதல் 64.09 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த நிதி ஆண்டுகளில், உள்நாட்டு மூலதன கொள்முதலில் தனியார் துறையில் இருந்து நேரடி கொள்முதல் சதவீதம் 15 சதவீதமாக குறைக்கப்படும். எதிர்கால தலைமைக்கு தேவையான அதிகாரிகளை வளர்ப்பதில் பயிற்சி கல்லூரியின் பங்கு தனித்துவமானது. இங்கு பயிற்சி பெற்றவர்களை பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
நினைவுப்பரிசு
நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தலைமை தளபதி நரவானே மற்றும் பயிற்சி ராணுவ அதிகாரிகள் கலந்துகொண்டனர். பின்னர் ராணுவ கல்லூரி லெப்டினன்ட் ஜெனரல் கலோன், மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு நினைவுப்பரிசு வழங்கினார். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மதியம் 12.30 மணியளவில் குன்னூர் ஜிம்கானா கிளப் தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் புறப்பட்டார்.
முன்னதாக அவரை, நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா சால்வை வழங்கி வழியனுப்பி வைத்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி உடனிருந்தார். பின்னர் சூலூர் விமானப்படை தளத்துக்கு 1.10 மணியளவில் வந்த மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், 1.20 மணியளவில் ராணுவ விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவரை கோவை கலெக்டர் சமீரன் மற்றும் சூலூர் விமானப்படை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story