பாதியில் நின்ற சாலை பணி முழுமை பெறுமா?
ஓவேலி அருகே பாதியில் நின்ற சாலை பணி முழுமை பெறுமா? என்று கிராம மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
கூடலூர்
ஓவேலி அருகே பாதியில் நின்ற சாலை பணி முழுமை பெறுமா? என்று கிராம மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
பாதியில் நிறுத்தம்
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி அண்ணாநகர் கிராம பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. இந்த பகுதியில் தார்சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். மேலும் அவசர காலங்களில் நோயாளிகள், கர்ப்பிணிகளை ஆஸ்பத்திரிக்கு வாகனங்களில் கொண்டு செல்ல முடியாத நிலை காணப்பட்டது.
இதனால் சாலை வசதி செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் சுமார் 150 மீட்டர் தூரம் சாலை அமைத்த நிலையில் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. ஆனால் இதுவரை பணி முழுமை பெறவில்லை. இதனால் 6 கிலோ மீட்டர் தூரம் மண் சாலையாக உள்ளது.
எதிர்பார்ப்பு
இதன் காரணமாக மழைக்காலத்தில் சேறும், சகதியுமாக மாறி விடுவதால் வாகனங்களை இயக்க முடிவதில்லை. எனவே பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இது தவிர அண்ணா நகரில் இருந்து தருமகிரி வழியாக சளிவயல், நந்தட்டிக்கு வரும் இணைப்பு சாலையாகவும் உள்ளது.
இதனால் சாலை பணி முழுமை பெற்றால் பல கிராம மக்களும் பயன் பெறுவார்கள். எனவே பாதியில் விடப்பட்ட 6 கிலோ மீட்டர் தூர சாலை பணி முழுமை பெறுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நடவடிக்கை
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:- இந்த பகுதியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டு இருந்தது. நாளடைவில் பழுதடைந்து விட்டதால் புதிய சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் உடனடியாக வேறு பணிகளுக்கு நிதி திருப்பி விடப்பட்டது.
இதன் காரணமாக இதுவரை சாலை அமைக்கும் பணி முழுமை பெறவில்லை. ஆனால் அதன்பின்பு பல்வேறு இடங்களுக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களிலாவது சாலை பணியை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story