மசினகுடியில் மதுக்கடை திறக்க கோரிக்கை
மசினகுடியில் மதுக்கடை திறக்க கோரிக்கை
கூடலூர்
மசினகுடியில் அரசு மதுக்கடை திறக்க வேண்டும் என்று குறை தீர்ப்பு முகாமில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
குறைதீர்ப்பு முகாம்
மசினகுடி அருகே உள்ள மாவனல்லா சமுதாய கூடத்தில் வருவாய்துறை, காவல்துறை உள்பட அனைத்து துறை அதிகாரிகள் சார்பில் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு உதவி கலெக்டர் மோனிகா ரானா தலைமை தாங்கினார். ஊட்டி தாசில்தார் தினேஷ்குமார், தனிப்பிரிவு தாசில்தார் குமார ராஜா, கூடலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மோகன் குமாரமங்கலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவனல்லா, சோகப்பட்டி, மேல்கம்பனல்லி உள்பட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மனுக்கள் அளித்தனர். மொத்தம் 40 மனுக்கள் பெறப்பட்டு, அந்தந்த துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
மதுக்கடை திறக்க வேண்டும்
அதில் பெரும்பாலான மக்கள் வீடு, நிலப்பட்டா, சாதி சான்றிதழ் மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு மனுக்களை அளித்து இருந்தனர். மேலும் மசினகுடியில் கடந்த 2 ஆண்டுகளாக அரசு மதுபானக்கடை செயல்படாததால் கூடலூர், தொரப்பள்ளிக்கு சென்று வர வேண்டிய நிலை உள்ளதாகவும், எனவே மசினகுடியில் அரசு மதுபானக்கடையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மற்றொரு தரப்பினர் மனு அளித்தனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முகாமில் மண்டல துணை தாசில்தார் துரைசாமி, மசினகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, வருவாய் ஆய்வாளர் சக்திவேல், கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன், தலைமை காவலர்கள் முகுந்தன், மகேஷ் மற்றும் அதிகாரிகள், போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story