வகுப்பறைகளை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிப்பு


வகுப்பறைகளை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிப்பு
x
தினத்தந்தி 30 Aug 2021 2:13 PM GMT (Updated: 30 Aug 2021 2:13 PM GMT)

பள்ளிகள் நாளை திறக்கப்படுவதால் தேனி மாவட்டத்தில் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

தேனி: 


பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. ஆன்லைன் மூலமும், கல்வி தொலைக்காட்சி வழியாகவும் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ளதால் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி முதற்கட்டமாக 9, 10-ம் வகுப்புகள் மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்காக பள்ளிகளை நாளை (புதன்கிழமை) முதல் திறந்து பாடம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஒரு வகுப்பறையில் 20 மாணவர்களை மட்டும் அனுமதிக்கவும், சுழற்சி முறையில் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு வரும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்யவும் அரசு அறிவுறுத்தி உள்ளது.

பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

கிருமி நாசினி தெளிப்பு
பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளதால் தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பள்ளி வளாகங்களில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றுவதோடு, வகுப்பறைகளை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. மேலும் பள்ளி வளாகங்களில் மாணவ, மாணவிகள் கைகளை கழுவ தேவையான தண்ணீர் மற்றும் சோப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று தூய்மை பணி மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டனர். பள்ளி விளையாட்டு மைதானத்தில் செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடந்தது. அவற்றையும் அகற்றி சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

பள்ளிகள் திறக்கப்படுவதால் ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். இதனால் தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்கள் குறித்த விவரங்களை சேகரித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் கல்வித்துறை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

Next Story