வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தீவிரம்


வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 30 Aug 2021 3:42 PM GMT (Updated: 30 Aug 2021 3:42 PM GMT)

நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

நாகப்பட்டினம்:
நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
நாளை முதல் பள்ளிகள் திறப்பு
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தமிழக அரசு பள்ளி, கல்லூரிகளை திறக்க தடை விதித்தது. இருப்பினும் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் கொரோனா படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளை தவிர மற்ற நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்யவும், கடற்கரைகளில் மக்கள் கூடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
மேலும் நாளை(புதன்கிழமை) முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
சுத்தம் செய்யும் பணி
இதில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களும், கல்லூரி மாணவர்களும் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். நாளை  முதல் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாணவர்கள் சமூக இடைவெளி பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில் குறியீடு போடுதல், பள்ளி வளாகத்தில் கிருமிநாசினி எந்திரம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கிருமிநாசினி தெளித்தல், சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு ஏதுவாக குறியீடு போடுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.
கட்டாயம் முககவசம்
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 220 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 99 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 319 பள்ளிகள் உள்ளன.  பள்ளிக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவசியம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். 
பள்ளிகளில் உள்ள கழிவறைகள், வகுப்பறைகள் தூய்மை செய்திருக்க வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என நாகை மாவட்ட பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story