பி.ஏ.பி. வாய்க்கால்களில் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு
பி.ஏ.பி. வாய்க்கால்களில் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு
பல்லடம்:
பல்லடம் அருகே பி.ஏ.பி. வாய்க்கால்களில் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிளாஸ்டிக் கழிவுகள்
பி.ஏ.பி.பாசனத்திட்டத்தில் பல்லடம், உடுமலை, பொள்ளாச்சி, காங்கேயம், உள்ளிட்ட தாலுகாக்களில் சுமார் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. திட்டம் ஆரம்பித்தபோது ஆண்டுக்கு 2 முறை, சுமார் 100 முதல் 130 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது ஆண்டுக்கு ஒரு முறையாகிவிட்டது. இந்த நிலையில் பி.ஏ.பி. வாய்க்கால்களில் சிலர் குப்பைகளை கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துகின்றனர்.
மேலும் சில பகுதிகளில் குப்பைகளை நேரடியாக கால்வாய்க்குள் வீசி விட்டு செல்லும் நிலையும் நடைபெறுகிறது. இந்த நிலையில் பல்லடம் அருகே நல்லூர்பாளையம் பி.ஏ.பி.பாசன வாய்க்காலில், பிளாஸ்டிக் பாட்டில்கள், பனியன் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் தெர்மாகோல்கள் உள்ளிட்ட பல்வேறு பிளாஸ்டிக் கழிவுகள் பி.ஏ.பி.வாய்க்காலில் மிதந்து வருகின்றன.
குப்பை கொட்டும் இடம்
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:-
இந்த சுற்றுவட்டாரப்பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேலாக பி.ஏ.பி.பாசனத்திட்டத்தில் விவசாயம் நடைபெறுகிறது. பி.ஏ.பி.பாசனத்தண்ணீர் விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.
இந்த நிலையில் பி.ஏ.பி. வாய்க்கால்களில் சிலர் குப்பைகளை கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துகின்றனர். பி.ஏ.பி. வாய்க்கால் வரும் வழியிலுள்ள பல கிராமங்களில் மட்டுமல்லாமல் நகர குடியிருப்புகளில் சேகரமாகும் குப்பைகளையும் வாய்க்கால் கரைகளில் கொட்டுகின்றனர்.
ஆனால் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற உள்ளாட்சி நிர்வாகங்களோ, பொதுப்பணித்துறையோ நடவடிக்கை எடுப்பதில்லை. மேலும் கரையோரங்களில் கொட்டப்படும் குப்பைகளும் வாய்க்காலுக்குள் சரிந்து விழுகின்றன. கிராம பகுதிகளில் பி.ஏ.பி. வாய்க்கால் மற்றும் படித்துறைகளை ஒரு சிலர் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடுகளும் ஏற்பட்டு நோய்கள் பரவும் நிலையுள்ளது. சிலர் குழுவாகச் சென்று பி.ஏ.பி வாய்க்கால்கரைகளில் அமர்ந்து மது குடித்துவிட்டு பாட்டில்களை உடைத்து வாய்க்காலுக்குள் வீசி விட்டு செல்கின்றனர்.
அதிகாரிகள் நடவடிக்கை
இதனால் வாய்க்காலில் தண்ணீர் திறக்கும்போது குப்பைகள் மற்றும் கழிவுகள் தண்ணீரில் கரைந்து நோய்த்தொற்று பரப்பும் வகையில் மாறிவிடுகிறது. விவசாயிகளின் கால்களையும் காயப்படுத்தி விடுகிறது.மேலும் குப்பைகளில் கலந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளால் மடைகளில் அடைப்பு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் விவசாய விளை நிலங்களுக்கு சென்று சேர்வதால் மண்வளம் பாழாகிறது.
எனவே பி.ஏ.பி வாய்க்கால்களில் குப்பை கொட்டுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் குப்பை கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். எனவே விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள பி.ஏ.பி. பாசன வாய்க்காலை பாதுகாக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story