தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்குதல்


தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்குதல்
x
தினத்தந்தி 30 Aug 2021 5:16 PM GMT (Updated: 30 Aug 2021 5:18 PM GMT)

கூடலூர் பகுதியில் காலநிலை மாற்றம் காரணமாக தேயிலை செடிகளை கொப்புள நோய் தாக்கி உள்ளது. மேலும் மகசூல் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் காலநிலை மாற்றம் காரணமாக தேயிலை செடிகளை கொப்புள நோய் தாக்கி உள்ளது. மேலும் மகசூல் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

தேயிலை விவசாயம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்டங்கள் உள்ளது. இது தவிர சிறு, குறு விவசாயிகள் தேயிலை விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது கூடலூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கோடைகாலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட தேயிலை தோட்டங்கள் பசுமையாக காட்சியளிக்கிறது. மேலும் பச்சை தேயிலை மகசூலும் அதிகரித்தது. இதனால் தொழிற்சாலைகளுக்கு பச்சை தேயிலை வரத்து அதிகரித்தது.

இந்த நிலையில் மழை மற்றும் கடும் பனி மூட்டம் என காலநிலைகளில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் தோட்டங்களில் தேயிலை செடிகளை கொப்புள நோய் தாக்கி வருகிறது.

கருகும் இலைகள்

தொடக்கத்தில் வெள்ளை நிறத்தில் இலைகளில் கொப்புளம் உருவாகிறது. பின்னர் அந்த இடம் காய்ந்து விடுகிறது. இவ்வாறு தேயிலை செடிகளில் இலைகள் கருகி காணப்படுகிறது. இதனால் பச்சை தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து கூடலூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது:- கோடைகாலத்தில் தேயிலை செடிகளில் மகசூல் குறைந்து காணப்பட்டது. தற்போது மழைக்காலமாக உள்ளதால் மகசூல் அதிகரித்தது. ஆனால் மழை மற்றும் கடும் பனிமூட்டம் என காலநிலைகளில் அடிக்கடி மாற்றம் ஏற்படுகிறது. 

விலை குறைந்தது

இதன் தாக்கம் தேயிலை செடிகளை கொப்புள நோய் பரவலாக தாக்கி வருகிறது. இதன் காரணமாக தேயிலை செடிகள் கருகி காணப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு பச்சை தேயிலைக்கு கிலோ ரூ.24 வரை விலை கிடைத்தது. தற்போது படிப்படியாக விலை குறைந்து ரூ.14 மட்டுமே வழங்கப்படுகிறது.

இதுபோன்ற நிலையில் கொப்புள நோயிடம் இருந்து தேயிலை செடிகளை பாதுகாக்க கூடுதல் விலை கொடுத்து மருந்துகள் வாங்க முடியாமல் உள்ளது. இதே நிலை நீடித்தால் பச்சை தேயிலை மகசூல் அடியோடு பாதிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story