வளர்ப்பு யானைகளின் உடல் எடை கணக்கீடு


வளர்ப்பு யானைகளின் உடல் எடை கணக்கீடு
x
தினத்தந்தி 30 Aug 2021 10:51 PM IST (Updated: 30 Aug 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

முதுமலையில் வளர்ப்பு யானைகளின் உடல் எடை கணக்கிடப்பட்டது.

கூடலூர்,

முதுமலையில் வளர்ப்பு யானைகளின் உடல் எடை கணக்கிடப்பட்டது.

வளர்ப்பு யானைகள்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவைகளுக்கு தினமும் காலை 9 மணிக்கு கேழ்வரகு களி உள்ளிட்ட ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படுகிறது. பின்னர் வனப்பகுதியில் ரோந்து செல்லுதல், பசுந்தீவனங்களை மேய்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபடுத்தப்படுகிறது.

இது தவிர யானைகளின் உடல் நலனை பேணுவதற்காக தெப்பக்காட்டில் கால்நடை மருத்துவ குழுவினர் பணியாற்றி வருகின்றனர். 3 மாதங்களுக்கு ஒருமுறை யானைகளின் உடல் எடையை வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் கணக்கெடுத்து வருகின்றனர். உடல் எடை குறைந்து இருந்தால், அந்த யானைகள் மீது தனி கவனம் செலுத்தி பராமரித்து வருகின்றனர். 

உடல் எடை கணக்கீடு

கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம் யானைகளின் உடல் எடை கணக்கெடுக்கப்பட்டது. அப்போது கோடைகாலம் என்பதால் பசுந்தீவன பற்றாக்குறை, மஸ்து பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் சராசரியாக 100 கிலோ முதல் 200 கிலோ வரை உடல் எடை குறைந்து காணப்பட்டது.

இந்த நிலையில் நேற்று யானைகளின் உடல் எடையை வனத்துறையினர் கணக்கிட்டனர். இதற்காக தொரப்பள்ளி வனத்துறை சோதனைச்சாவடி அருகே உள்ள மையத்துக்கு யானைகளை அழைத்து வந்தனர். தொடர்ந்து மூர்த்தி, சங்கர், இந்திரா, முதுமலை, வில்சன், செந்தில்வடிவு, சந்தோஷ், கிரி உள்பட 11 யானைகளின் உடல் எடையை வனத்துறையினர் கணக்கெடுத்தனர்.

110 கிலோ வரை அதிகரிப்பு

இது தவிர மசினி, ரகு உள்பட 3 குட்டி யானைகளுக்கு மட்டும் தெப்பக்காட்டில் உடல் எடை கணக்கெடுக்கப்பட்டது. பிற 7 யானைகள் தேவாலா உள்பட பல்வேறு இடங்களில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. மீதமுள்ள யானைகள் மருத்துவ சிகிச்சையில் உள்ளது. இதனால் அந்த யானைகளின் உடல் எடையை கணக்கிடவில்லை.

இதுகுறித்து வனச்சரகர் தயானந்தன், வனவர் சந்தனராஜ் கூறும்போது, தெப்பக்காட்டில் கணக்கிடப்பட்ட 3 குட்டி யானைகளின் உடல் எடை மாதந்தோறும் கணக்கிடப்படும். பெரிய யானைகள் கோடை காலத்தில் உடல் எடை சற்று குறைந்திருந்தது. தற்போது மழை பெய்து வனப்பகுதியில் பசுந்தீவனம் அதிகரித்துள்ளதால் சராசரியாக ஒவ்வொரு யானைகளின் எடையும் 110 கிலோ வரை அதிகரித்துள்ளது என்றனர்.


Next Story