குடும்பத்துடன் வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டம்


குடும்பத்துடன் வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 30 Aug 2021 10:53 PM IST (Updated: 30 Aug 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் சீல் வைத்த கடைகளை திறக்கக்கோரி குடும்பத்துடன் வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

ஊட்டி,

ஊட்டியில் சீல் வைத்த கடைகளை திறக்கக்கோரி குடும்பத்துடன் வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

கடைகளுக்கு ‘சீல்’

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டின் உள் மற்றும் வெளிப்புற பகுதிகளில் வாடகை செலுத்தாத 736 கடைகளுக்கு ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. சீல் வைக்காத கடைகளை திறக்க அனுமதி அளித்தும் வியாபாரிகள் திறக்கவில்லை. இதனால் மார்க்கெட்டில் நேற்று 6-வது நாளாக கடைகள் மூடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று மார்க்கெட்டில் சீல் வைக்கப்பட்ட கடைகளை திறக்கக்கோரி ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் தங்களது குடும்பத்தினருடன் வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி ஊட்டி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சசிகுமார் மேற்பார்வையில் தடுப்புகள் அமைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

வியாபாரிகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை விளக்கி நிர்வாகிகள் பேசினர்.

அழைத்து பேச வேண்டும்

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:- கடந்த 6 நாட்களாக நகராட்சி மார்க்கெட்டில் கடைகள் மூடப்பட்டு உள்ளதால் விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 6 நாட்கள் ஆகியும் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை.

எங்களை மாவட்ட நிர்வாகம் அழைத்து பேசி உடனடியாக தீர்வு காண வேண்டும். உயர்த்தப்பட்ட வாடகையில் 75 சதவீதம் செலுத்த வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்து வருகிறது. எனவே கடைகளுக்கு வாடகை உயர்த்தப்பட்டு உள்ளதை வரன்முறைப்படுத்த வேண்டும்.  
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ஆர்ப்பாட்டம்

இதற்கிடையில் வியாபாரிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கடைகளுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி படிப்படியாக நிலுவை வாடகையை வசூலிக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story