நேரடி நெல்கொள்முதல் நிலைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் திடீர் சாலைமறியல்
பாணாவரம் அருகே நேரடி நெல்கொள்முதல் நிலைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவேரிப்பாக்கம்
பாணாவரம் அருகே நேரடி நெல்கொள்முதல் நிலைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெல் முளைத்து சேதம்
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தை அடுத்த மகேந்திரவாடி பகுதியில் நேரடி கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய சுமார் 250 டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அதில் 90 விவசாயிகளிடம் இருந்து மட்டுமே நெல் கொள்முதல் செய்த ஊழியர்கள் மீதமுள்ள 150-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் வரும் அக்டோபர் மாதத்த்தில் தான் நெல் கொள்முதல் செய்யப்படும் எனவ கூறியுள்ளனர்.
ஆனால் இரவு நேரங்களில் வியாபாரிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை கமிஷன் பெற்றுக் கொண்டு கொள்முதல் முதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
டோக்கன் கொடுத்ததை நம்பி சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதலுக்காக விவசாயிகள் வைத்துள்ளதாகவும், அவை அனைத்தும் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையால் நனைந்து முளைத்து வீணாகி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
சாலை மறியல்
இந்த நிலையில் ஏற்கனவே கொள்முதல் செய்த நெல் மூட்டைகளுக்கு உடனடியாக உரிய பணத்தை வழங்க வேண்டும் என்றும், விவசாயிகளிடம் ஒரு மூட்டைக்கு 70 ரூபாய் கமிஷன் கேட்டதாகவும், வியாபாரிகளிடம் ஒரு மூட்டைக்கு 100 ரூபாய் பெற்றுக்கொண்டு விவசாயிகள் பெயரில் கணக்கு காட்டப்படுவதாகவும் கூறி, நிர்வாகத்தில் பணிபுரியும் அனைவரையும் மாவட்ட நிர்வாகம் விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கொள்முதல்நிலையம் எதிரே பாணாவரம் -நெமிலி சாலையில் திடீரென சாலை மறியலில் நேற்று ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பாணாவரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) திருநாவுகரசு, கொள்முதல் நிலைய அதிகாரிகள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜமுத்து, ராஜேந்திரன் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து அனைவரும் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த மறியல் காரணமாக பாணாவரம்- நெமிலி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.
Related Tags :
Next Story