கொரோனா தடுப்பு பணியில் மெத்தனம்: 18 வருவாய் ஆய்வாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்-கலெக்டர் ஸ்ரேயாசிங் அதிரடி


கொரோனா தடுப்பு பணியில் மெத்தனம்: 18 வருவாய் ஆய்வாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்-கலெக்டர் ஸ்ரேயாசிங் அதிரடி
x
தினத்தந்தி 30 Aug 2021 11:52 PM IST (Updated: 30 Aug 2021 11:52 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு பணியில் மெத்தனமாக செயல்பட்ட 18 வருவாய் ஆய்வாளர்களுக்கு விளக்கம் கேட்டு கலெக்டர் ஸ்ரேயா சிங் அதிரடியாக நோட்டீசு வழங்கினார்.

நாமக்கல்:
கொரோனா தடுப்பு பணி
நாமக்கல் மாவட்டத்தில் சமீப காலமாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் அரசின் நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்கிறார்களா? என்பதை கண்காணிக்கவும், தவறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வருவாய்த்துறையினருக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டுள்ளார். 
மேலும் தங்களது பகுதிகளில் தினமும் ஒரு மணி நேரத்திற்கு குறையாமல் ஆய்வு நடத்தி அபராதம் விதிக்கவும் அவர் வருவாய்த்துறையினரை அறிவுறுத்தி உள்ளார். 
அதிரடி உத்தரவு
இந்தநிலையில் மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களை கண்டறிய வருவாய்த்துறையினர் உரிய ஆய்வு நடத்தவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கொரோனா தடுப்பு பணியில் அவர்கள் மெத்தனமாக செயல்பட்டதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க மாவட்டத்தில் உள்ள 18 வருவாய் ஆய்வாளர்களுக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங், தமிழ்நாடு குடிமைப்பொருள் விதி 17 (ஏ) நோட்டீசு வழங்கினார். மேலும் 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர்கள் எழுத்து பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும், மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கலெக்டரின் இந்த உத்தரவு வருவாய்த்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story