பாதாள சாக்கடை குழாயில் தீப்பந்தம் ஏற்றி பொதுமக்கள் போராட்டம்


பாதாள சாக்கடை குழாயில் தீப்பந்தம் ஏற்றி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 30 Aug 2021 7:10 PM GMT (Updated: 30 Aug 2021 7:10 PM GMT)

கடலூரில் உடைந்து பல நாட்கள் ஆகியும் சீரமைக்காததால் பாதாள சாக்கடை மூடியில் தீப்பந்தம் ஏற்றி பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர், 

கடலூர் பெருநகராட்சியில் மொத்தம் 45 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் செல்லும் வகையில், அனைத்து வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பாதாள சாக்கடையில் அடைப்புகள் ஏதேனும் ஏற்பட்டால், அதனை சரி செய்வதற்காக ஆங்காங்கே, பாதாள சாக்கடையின் மேற்பகுதியில் சிமெண்டாலான மூடிகள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த மூடிகள் பல இடங்களில் உடைந்தும், சேதமடைந்தும் பள்ளம் போல் காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். 

தீப்பந்தம் ஏற்றி போராட்டம் 

அந்த வகையில் கடலூர் வில்வநகரில் உள்ள பாதாள சாக்கடை குழாய் மூடி உடைந்து, பள்ளம் போல் காட்சியளித்தது. இதனால் அதனை சரிசெய்யக்கோரி அப்பகுதி மக்கள், கடலூர் பெருநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியின் மீது தீப்பந்தம் ஏற்றி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளிடம் இப்பகுதியில் பெரிய பள்ளம் உள்ளது என்றும், அதனால் இவ்வழியாக கவனமாக செல்லும்படியும் அறிவுறுத்தினர். மேலும் பாதாள சாக்கடை மூடியை விரைந்து சரிசெய்யாவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறிவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story