குடிநீர் கேட்டு 2 இடங்களில் காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்


குடிநீர் கேட்டு 2 இடங்களில் காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 31 Aug 2021 12:44 AM IST (Updated: 31 Aug 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் குடிநீர் கேட்டு 2 இடங்களில் காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல் செய்தனர்.

நெல்லை:
நெல்லை கொக்கிரகுளத்தில் 2 இடங்களில் காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் பிரச்சினை

நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள கொக்கிரகுளத்தில் குடிநீர் தட்டுப்பாடு பல ஆண்டுகளாக உள்ளன. இதற்கு தீர்வு காண மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கொக்கிரகுளத்திற்கு குடிநீர் வரக்கூடிய பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த உடைப்பின் காரணமாக கொக்கிரகுளம் பகுதியில் கடந்த 5 நாட்களாக குடிநீர் வரவில்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொது மக்கள் நேற்று நெல்லையில் இருந்து மேலப்பாளையம் செல்லும் சாலையான நேதாஜி சாலையில் சிவன்கோவில் தெற்கு தெரு அருகிலும், மாரியம்மன் கோவில் தெரு அருகிலும் காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை மாநகராட்சி உதவி ஆணையாளர் அய்யப்பன், உதவி செயற்பொறியாளர் சாந்தி மற்றும் பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், முகமது இப்ராஹிம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை வேண்டும் என்று வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story