பள்ளிக்கூடங்களில் கிருமி நாசினி தெளிப்பு
நெல்லையில் பள்ளிக்கூடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லையில் பள்ளிக்கூடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரமாக நடந்தது.
கொரோனா பரவல்
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவை மூடப்பட்டன.
தொடர்ந்து பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தியேட்டர், பூங்காக்கள் உள்ளிட்டவைகள் திறக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் தற்போது 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டு வருகின்றது. ஆனால் பள்ளி, கல்லூரி மட்டும் திறக்கப்படவில்லை.
பள்ளி, கல்லூரி
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்ததால் நாளை (புதன்கிழமை) முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதாவது 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்றும், அதே நேரத்தில் கல்லூரிகளும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நெல்லை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களிலும், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிலும் சுத்தப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. நேற்றும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் சுமார் 7 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 90 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளனர். மீதம் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி விரைவாக நடந்து வருகிறது.
குழுக்கள் அமைப்பு
இதுகுறித்து நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன் கூறியதாவது:-
அரசு வழிகாட்டுதலின்படி நெல்லை மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படுகிறது. 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 9-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1 வகுப்பு பள்ளி மாணவர்கள் அனைவரும் அல்லது சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும்.
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களிலும் கலெக்டர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மாவட்ட அளவில் 9 வட்டாரங்களிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் பள்ளியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வார்கள். ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் சுமார் 300 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போடாமல் உள்ளனர். ஒரு வகுப்பிற்கு 10 பெஞ்சுகள் வீதம் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். பள்ளிகள் தொடங்கியது முதல் 45 நாட்களுக்கு முந்தைய வகுப்பு பாடங்களை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story