பதுக்கி வைத்து விற்க மதுபாட்டில்கள் கொடுத்ததாக டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்- விற்பனையாளர் மீது வழக்கு
பதுக்கி வைத்து விற்க மதுபாட்டில்கள் கொடுத்ததாக டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்- விற்பனையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்:
திடீர் சோதனை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து, நள்ளிரவு மற்றும் காலை நேரங்களில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள், டாஸ்மாக் கடை விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் உதவியோடு மதுபாட்டில்களை எடுத்துச்செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலை கதிரவன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா உள்ளிட்ட போலீசார் நேற்று காலை வாரியங்காவல், இலையூர் போன்ற பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது டாஸ்மாக் கடையின் அருகில் சக்கரவர்த்தி என்பவர் இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை எடுத்து சென்றது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி, விற்பனை செய்வதற்காக டாஸ்மாக் கடையில் இருந்து வாங்கி வந்த 120 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செயதனா். மேலும் அவரிடம் போலீசார் துருவித்துருவி நடத்திய விசாரணையில், டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்ததும், அவற்றை கடையின் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாாள் வழங்கியதாகவும், அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
வழக்கு
மேலும் வாரியங்காவல் பகுதியில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்ற தமிழரசன், நடுபுள்ள ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களும் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கி வந்து விற்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் தமிழக அரசு, காலை 10 மணிக்கு கடை திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நிலையில் காலை 7 மணிக்கே திறந்து டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை மேற்பார்வையாளர் பாலமுருகன் மற்றும் விற்பனையாளர் சிவகுமார் ஆகியோர் எடுத்து தந்ததாக அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து பாலமுருகன், சிவகுமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மது விற்றதாக தமிழரசன், நடுபுள்ள, சக்கரவர்த்தி ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் துணை சூப்பிரண்டு கலை கதிரவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story