வெவ்வேறு இடங்களில் ரெயிலில் அடிபட்டு பெண்- வாலிபர் பலி
வெவ்வேறு இடங்களில் ரெயிலில் அடிபட்டு பெண் மற்றும் வாலிபர் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.
அரியலூர்:
அரியலூர்- ஓட்டக்கோவில் ரெயில் நிலையம் இடையே கோவிந்தபுரம் கிராமத்தில் ரெயில்வே மேம்பாலத்தின் அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த அரியலூர் ரெயில்வே போலீசார் அங்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர் மஞ்சள் நிற பூப்போட்ட சேலை மற்றும் மஞ்சள் நிற ஜாக்கெட் அணிந்திருந்தார். கழுத்தில் தாலி இருந்தது. அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பெண்ணின் உடலை அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலப்பழுவூர் கிராமத்தை சேர்ந்தவர் மருதமுத்து(வயது 35). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து நேற்று பூண்டி காட்டுப்பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் ரெயிலில் அடிபட்டு மருதமுத்து இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருடைய உடலை கீழப்பழுவூர் போலீசார் கைப்பற்றி, ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story