புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு பணி தீவிரம்
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
செங்கோட்டை:
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. அங்கு தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படுவதால், தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளித்த பின்னரே அனுமதிக்கின்றனர்.
சோதனைச்சாவடிகளில் மருத்துவ குழுவினரும் கண்காணித்து வருகின்றனர். இருதவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் அல்லது கடந்த 3 நாட்களில் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்று பெற்றவர்கள் இ-பதிவு வைத்திருந்தால் மட்டுமே மாநில எல்லையைக் கடந்து செல்ல அனுமதிக்கின்றனர்.
தமிழக-கேரள எல்லையான செங்கோட்டை அருகே புளியரை சோதனைச்சாவடியில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறையினருடன் போலீசார் இணைந்து கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இரு மாநிலங்களுக்கும் செல்கிறவர்களையும் மருத்துவ குழுவினர் பரிசோதித்து, அவர்களது ஆதார் அட்டை எண், செல்போன் எண் போன்றவற்றை பதிவு செய்த பின்னரே அனுமதிக்கின்றனர். இந்த நிலையில் கேரளாவில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. எனவே இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையிலும் பால், மருந்து, மளிகை பொருட்கள், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களும், மருத்துவ சிகிச்சைக்கு செல்கிறவர்களையும் மட்டுமே அனுமதிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story