பலாத்கார வழக்கில் கைதானவர் மர்மசாவு; சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் பணி இடைநீக்கம்
பலாத்கார வழக்கில் கைதான ஓட்டல் உரிமையாளர் மர்மமாக உயிர் இழந்த வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீஸ்காரர்களை பணி இடைநீக்கம் செய்து விஜயாப்புரா போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த்குமார் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு:
ஓட்டல் உரிமையாளர் மர்மசாவு
விஜயாப்புரா மாவட்டம் சிந்தகி டவுன் பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தவர் தேவிநத் சங்கோகி. இவரது ஓட்டலில் ஒரு தொழிலாளி தனது 13 வயது மகளுடன் தங்கி இருந்து வேலை பார்த்தார். அந்த சிறுமியை தேவிந்த் சங்கோகி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிந்தகி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த தேவிந்த் சங்கோகியை கடந்த 28-ந் தேதி இரவு கைது செய்திருந்தார்கள்.
அன்றைய தினம் நள்ளிரவு விசாரணைக்காக போலீஸ் நிலையத்திலேயே தேவிந்த் சங்கோகியை தங்க வைத்திருந்தனர். மறுநாள் அதிகாலையில் கழிப்பறையில் அவர் தூக்கில் பிணமாக தொங்கினார். தேவிந்த் சங்கோகியை, போலீசார் அடித்து கொலை செய்துவிட்டதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். ஆனால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பதாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
5 பேர் பணி இடைநீக்கம்
இதனால் தேவிந்த் சங்கோகி எப்படி செத்தார்? என்பது மர்மமாக உள்ளது. போலீஸ் நிலையத்தில் வைத்து அவர் மர்மமாக உயிர் இழந்ததால், அதுகுறித்து சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், போலீஸ் நிலையத்தில் ஓட்டல் உரிமையாளர் மர்மமாக உயிர் இழந்த சம்பவத்தில் போலீசாரின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவு காரணம் என்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சிந்தகி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டா சங்கமேஷ் ஒசமணி, போலீஸ்காரர்களான என்.பி.நாத், குருராஜ், ஆனந்த் பட்டீல, பட்டோதா ஆகிய 5 பேரை பணி இடைநீக்கம் செய்து விஜயாப்புரா போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த்குமார் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு, ஆனந்த்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Related Tags :
Next Story