கார்கள் மோதல்; கணவன்-மனைவி உள்பட 6 பேர் படுகாயம்
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கார்கள் மோதி கொண்ட விபத்தில், கணவன்-மனைவி உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
குழித்துறை:
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கார்கள் மோதி கொண்ட விபத்தில், கணவன்-மனைவி உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
கார்கள் மோதல்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் விவேகானந்தா தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 46). இவர் நேற்று முன்தினம் தன்னுடைய மனைவி சுமதி (39), மகள் சிவ பிரசன்னா (11) ஆகியோருடன் காரில் மார்த்தாண்டம் அருகே படந்தாலுமூடு என்ற இடத்தில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்றார்.
அங்கிருந்து மீண்டும் அவர் தனது காரில் குடும்பத்துடன் இரவில் ஊருக்கு புறப்பட்டார். அவர் கார் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே ஒரு கார் வந்தது. அதை மார்த்தாண்டம் அருகே கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்த ஜோஸ் (31) என்பவர் ஓட்டி வந்தார். அந்த காரிலும் 3 பேர் பயணம் செய்தனர். கண் இமைக்கும் நேரத்தில் இரண்டு கார்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
6 பேர் படுகாயம்
இந்த விபத்தில் இரு கார்களிலும் இருந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும், மார்த்தாண்டம் போலீசார் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். வாகனங்களும் அப்புறப்படுத்தப்பட்டன. இதில் காயம் அடைந்த சுப்பிரமணியன், சுமதி, சிவ பிரசன்னா ஆகிய 3 பேரும் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதே போல் ஜோஸ் (31), அவருடைய நண்பர்கள் வினு (29), எட்வின் (24) ஆகியோர் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் கிறிஸ்துராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story