ஆத்தூர் அருகே பயங்கரம்: விவசாயி வெட்டிக்கொலை-சொத்து தகராறில் தம்பி ஆத்திரம்


ஆத்தூர் அருகே பயங்கரம்: விவசாயி வெட்டிக்கொலை-சொத்து தகராறில் தம்பி ஆத்திரம்
x
தினத்தந்தி 31 Aug 2021 3:12 AM IST (Updated: 31 Aug 2021 3:12 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே சொத்து தகராறில் விவசாயியை அவரது தம்பி வெட்டிக்கொலை செய்தார்.

ஆத்தூர்:
ஆத்தூர் அருகே சொத்து தகராறில் விவசாயியை அவரது தம்பி வெட்டிக்கொலை செய்தார்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
விவசாயி
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கந்தசாமி புதூரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 66). விவசாயி. இவருடைய தம்பி சடையன் (52). இவர்கள் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் சடையன், தனது அண்ணன் பெரியசாமியிடம் தந்தை வெங்கடாசலத்துக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை பிரித்து கொடுக்குமாறு கேட்டு தகராறு செய்துள்ளார்.
அதன்பிறகு 2 பேரும் தனித்தனியாக வசித்து வந்தனர். மேலும் சடையனின் மனைவி மற்றும் மகன், மகள் ஆகியோர் கடந்த 8 ஆண்டுகளாக அவரை பிரிந்து பெரம்பலூரில் தனியாக வசித்து வருகின்றனர். இதனிடையே நடுவலூர் பகுதியில் சடையன் சொந்தமாக தனியாக நிலம் வாங்கி இருந்தார். இது குறித்து அறிந்த பெரியசாமி, உனக்கு தான் அந்த நிலம் இருக்கிறதே, பின்னர் எதற்கு தந்தையின் நிலத்தையும் கேட்டு தகராறு செய்கிறாய்? என்றுக் கூறி, சொத்தை பிரித்து கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.
வெட்டிக்கொலை
எனினும் சடையன், தனது அண்ணன் பெரியசாமியிடம் சொத்தை பிரித்து கொடுக்குமாறு கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் தந்தைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை பிரித்து கொடுக்க பெரியசாமி மறுத்து வந்ததால், ஆத்திரத்தில் இருந்த சடையன் அவரை கொல்ல முடிவு செய்தார். 
இதற்காக நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் பெரியசாமியின் வீட்டின் அருகே அரிவாளுடன் சடையன் பதுங்கி இருந்தார். அப்போது அங்கு வந்த பெரியசாமியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீேழ சரிந்தார். இதைத்தொடர்ந்து சடையன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர், படுகாயம் அடைந்த பெரியசாமியை மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பெரியசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
கைது
இது குறித்து தகவல் அறிந்ததும் மல்லியகரை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்்ந்து தலைமறைவாக இருந்த சடையனை  போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கொேரானா பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். 
இந்த சம்பவம் தொடர்பாக மல்லியகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சொத்து தகராறில் விவசாயியை அவரது தம்பியே வெட்டிக்கொன்ற சம்பவம் ஆத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story