சூட்டிங்மட்டம், பைன்பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறப்பு


சூட்டிங்மட்டம், பைன்பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறப்பு
x
தினத்தந்தி 31 Aug 2021 2:15 PM IST (Updated: 31 Aug 2021 2:15 PM IST)
t-max-icont-min-icon

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சூட்டிங்மட்டம், பைன்பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

ஊட்டி

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சூட்டிங்மட்டம், பைன்பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

ஊரடங்கில் தளர்வு

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதி முதல் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. இதனால் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் கோடை சீசன் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடந்த 23-ந் தேதி முதல் தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்காக்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் கீழ் ஊட்டி, பைக்காராவில் உள்ள படகு இல்லங்கள் திறக்கப்பட்டது. இவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

பைன்பாரஸ்ட் திறப்பு

இந்த நிலையில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களை திறக்க அனுமதி வழங்ககப்பட்டது. அதன்படி நேற்று ஊட்டி அருகே உள்ள சூட்டிங்மட்டம், பைன்பாரஸ்ட், பைக்காரா நீர்வீழ்ச்சி, கேர்ன்ஹில், அவலாஞ்சி, குன்னூர் அருகே உள்ள லேம்ஸ்ராக், டால்பின்நோஸ் போன்ற சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன. அங்கு உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகு சுற்றுலா பயணிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

பைன்பாரஸ்டில் உள்ள மரங்களுக்கு நடுவே நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். காமராஜர் சாகர் அணையின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். பைக்காரா நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் பின்னணியில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். முன்னதாக அவர்கள் பைக்காராவில் இருந்து பேட்டரி காரில் சென்றனர்.

முககவசம் கட்டாயம்

சூட்டிங்மட்டம் சுற்றுலா தலத்தில் சுற்றுலா பயணிகள் குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர். பசுமையான புல்வெளிகள் உடைய சூட்டிங்மட்டத்தில் இருந்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை உள்ள இயற்கை எழில் மிகுந்த காட்சிகளை பார்வையிட்டனர். அங்கு கட்டாயம் முககவசம் அணிந்து சுற்றி பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. புகைப்படம் எடுக்கும்போது முககவசத்தை அகற்றி விட்டு, புகைப்படம் எடுத்த பிறகு உடனடியாக முககவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஆனால் இன்னும் தொட்டபெட்டா மலைச்சிகரம் திறக்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story