சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 79.29 சதவீதம் நீர் இருப்பு
சென்னை புறநகர் பகுதிகளில் தொடர் மழை காரணமாக குடிநீர் வழங்கும் ஏரிகளில் 79.29 சதவீதம் நீர் நிரம்பி உள்ளது. இந்த ஆண்டு 13 டி.எம்.சி. நீர் சேமிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
ஏரிகளின் நீர்மட்டம்
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. அந்தவகையில் குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. குறிப்பாக கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் கீழ் பூண்டி ஏரிக்கு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து 573 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. அதேபோல், மழை காரணமாக 436 கன அடி கூடுதலாக வருகிறது. ஆக மொத்தம் 1,009 கன அடி நீர் பூண்டி ஏரிக்கு மட்டும் வந்து கொண்டு இருக்கிறது.
குடிநீர் வழங்கும் ஏரிகளில், 3 ஆயிரத்து 291 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 2 ஆயிரத்து 521 மில்லியன் கன அடியும், 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 630 மில்லியன் கன அடியும், 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2 ஆயிரத்து 833 மில்லியன் கன அடியும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 483 மில்லியன் கன அடியும், 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 2 ஆயிரத்து 552 மில்லியன் கன அடியும் நீர் இருப்பு உள்ளது. இதுதவிர 1,465 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் 1,465 மில்லியன் கன அடியுடன் ஏரி நிரம்பி உள்ளது.
79.29 சதவீதம் இருப்பு
பூண்டி ஏரியில் 78.03 சதவீதமும், சோழவரத்தில் 58.28 சதவீதமும், புழல் ஏரியில் 85.85 சதவீதமும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 96.60 சதவீதமும், செம்பரம்பாக்கம் ஏரியில் 70.01 சதவீதமும், வீராணம் ஏரியில் 100 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. சராசரியாக அனைத்து ஏரிகளிலும் 79.29 சதவீதம் இருப்பு உள்ளது. அனைத்து ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13 ஆயிரத்து 222 மில்லியன் கன அடியில் (13.22 டி.எம்.சி.). தற்போது 10 ஆயிரத்து 484 மில்லியன் கன அடி (10.48 டி.எம்.சி.) நீர் இருப்பு உள்ளது. ஏரிகளில் நீர் நிரம்புவதற்கு புறநகர் பகுதிகளில் பெய்யும் மழையும் ஒரு காரணமாக உள்ளது.
தென்மேற்கு பருவ மழையை விட, வடகிழக்கு பருவமழை மூலம் தான் தமிழகம் அதிகம் பயனடையும். அந்தவகையில், வருகிற அக்டோபர் மாதம் தொடங்கும் வடகிழக்கு பருவ மழை மூலம் தமிழகத்திற்கு அதிக நீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த ஆண்டு எப்படியும் அனைத்து ஏரிகளிலும் சேர்த்து 13 டி.எம்.சி. வரை சேமிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
மேற்கண்ட தகவல்களை பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story