மோட்டார் சைக்கிள்கள் மோதல். திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற மணமகன் பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல். திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற மணமகன் பலி
x
தினத்தந்தி 31 Aug 2021 11:07 AM GMT (Updated: 2021-08-31T16:37:54+05:30)

கீழ்பென்னாத்தூர் அருகே திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற மணமகன் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியானார்.

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் அருகே திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற மணமகன் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியானார்.

திருமணம் நிச்சயம்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கழிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர். இவரது மகன் விக்னேஷ் (வயது27). டைல்ஸ் பதிக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 10-ந் தேதி திருமணம் நடக்க இருந்தது. இதனால் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் விக்னேஷ் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.

நேற்று முன்தினம் இரவு கழிக்குளம் அருகில் உள்ள கனபாபுரம் சுங்காநகரில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு விக்னேஷ் மோட்டார் சைக்கிளில் சென்று திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளார். பின்னர் அங்கிருந்து இரவு 9 மணிக்கு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

மோட்டார்சைக்கிள் மோதி பலி

கனபாபுரம் காளிக்கோவில் அருகே வந்தபோது, எதிரே வழுதலங்குணம் நோக்கி வேகமாக வந்த மோட்டார்சைக்கிள், விக்னேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேராக மோதியது. இதில் தலை, நெற்றி உ்ளிட்ட இடங்களில் படுகாயம் அடைந்த விக்னேஷ் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

விபத்தில் சிக்கிய மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த வழுதலங்குணம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது மகன் உதயகுமார் (20) மற்றும் அவருடன் வந்த 2 பேர் என 3 பேருக்கு காயம் ஏற்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
10 நாட்களில் திருமணம் நடக்க இருந்த நிலையில், மணமகன் விபத்தில் இறந்தது உறவினர்கள் மற்றும் கழிக்குளம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story