தூத்துக்குடி அருகே 2 வழிப்பறி கொள்ளையர்கள் கைது 20½ பவுன் தங்க நகை மீட்பு


தூத்துக்குடி அருகே  2 வழிப்பறி கொள்ளையர்கள் கைது  20½ பவுன் தங்க நகை மீட்பு
x
தினத்தந்தி 31 Aug 2021 4:17 PM GMT (Updated: 31 Aug 2021 4:17 PM GMT)

2 வழிப்பறி கொள்ளையர்கள் கைது

தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து, 20½ பவுன் தங்க நகைகளையும் மீட்டனர்.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வழிப்பறி
தூத்துக்குடி புறநகர் பகுதிகளான சிப்காட், தட்டப்பாறை மற்றும் புதுக்கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தனியாக வேலைக்கு செல்லும் பெண்கள், கடை வீதிகளுக்கு செல்லும் பெண்களை குறிவைத்து வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன. அதன்படி 7 பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் இந்த வழிப்பறியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக சிப்காட்டில் ஒரு வழக்கும், தட்டப்பாறை போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும், புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் 5 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
தனிப்படை
இது தொடர்பாக தூத்துக்குடி ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு மேற்பார்வையில் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. 
இந்த தனிப்படையினர், சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, புதுக்கோட்டை நடுக்கூட்டுடன் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த லட்சுமணன் மகன் பாரதி செல்வம் (வயது 20) மற்றும் நடுக்கூட்டுடன்காடு லட்சுமண பெருமாள் மகன் நாகராஜ் (23) ஆகிய 2 பேரும் வேலைக்கு செல்லாமல் கையில் நிறைய பணம் வைத்துக் கொண்டு ஆடம்பரமாக செலவு செய்து வந்தது தெரியவந்தது. இதனால் அவர்கள் மீது சந்தேகமடைந்த தனிப்படையினர் 2 பேரையும் கண்காணித்து வந்தனர்.
கொள்ளையர்கள் கைது
இந்த நிலையில் தனிப்படை போலீசார் புதுக்கோட்டை பழைய பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு பாரதி செல்வம், நாகராஜ் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். 
விசாரணையில், அவர்கள் 2 பேரும் தொடர் வழிப்பறி கொள்ளையிலும், முத்தையாபுரம், தெர்மல்நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவத்திலும் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் தனிப்படை போலீசார் பாரதிசெல்வம், நாகராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பிலான 20½பவுன் தங்க நகைகள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட பாரதி செல்வம் கடந்த 2018-ம் ஆண்டு புதுக்கோட்டை போலீஸ் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் நடந்த கொள்ளை வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் வேறு ஏதேனும் வழக்குகளில் ஈடுபட்டு உள்ளார்களா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவவாறு அவர் கூறினார்.

Next Story