தொட்டபெட்டா சாலையில் மண்சரிவு


தொட்டபெட்டா சாலையில் மண்சரிவு
x
தினத்தந்தி 31 Aug 2021 4:45 PM GMT (Updated: 2021-08-31T22:16:59+05:30)

தொடர் மழையால் தொட்டபெட்டா சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா தலம் மூடப்பட்டு உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா போன்ற அனைத்து பூங்காக்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் ஊட்டி, பைக்காரா படகு இல்லங்கள் கடந்த 23-ந் தேதி முதல் திறக்கப்பட்டது.

தொடர்ந்து வனத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் சூட்டிங்மட்டம், பைன்பாரஸ்ட், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினரோடு கண்டு ரசித்து வருகின்றனர்.

சாலையில் மண்சரிவு

இந்த நிலையில் ஊட்டியில் பெய்த தொடர் மழையின் காரணமாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் இயங்கி வரும் தொட்டபெட்டா மலைச்சிகரம் செல்லும் சாலையில் ஊட்டி-கோத்தகிரி இடையே மண்சரிவு ஏற்பட்டு சாலை பெயர்ந்து உள்ளது.

 இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக சுற்றுலா தலமான தொட்டபெட்டா மலைச்சிகரம் பாதுகாப்பு கருதி மூடப்பட்டு உள்ளது. 

தொடர்ந்து மழையால் பெயர்ந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் கூறுகையில்,  சாலை பெயர்வதை தடுக்க தடுப்பு சுவர் அமைத்து சீரமைத்தால் தான் முடியும். எனவே அங்குள்ள சோதனைச்சாவடியில் சாலை பழுதடைந்ததால் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது என்று பேனர் வைக்கப்பட்டு இருக்கிறது.

ஏமாற்றம்

இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா மலைச் சிகரம் திறக்கப்படாததை அறிந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, நீலகிரியில் பிற சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு உள்ளது. 

உயரமான தொட்டபெட்டா மலைச் சிகரத்தில் இருந்து கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அணைகள், கர்நாடகா மாநில எல்லை பகுதிகள் போன்றவற்றை நவீன தொலைநோக்கிகள் மூலம் கண்டு ரசிக்கலாம். எனவே, பழுதடைந்த சாலையை சீரமைத்து உடனடியாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story