தடுப்பூசி செலுத்தாத மாணவர்கள் கல்லூரிக்கு வர அனுமதி இல்லை


தடுப்பூசி செலுத்தாத மாணவர்கள் கல்லூரிக்கு வர அனுமதி இல்லை
x
தினத்தந்தி 31 Aug 2021 4:48 PM GMT (Updated: 2021-08-31T22:20:27+05:30)

நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்படுகிறது. இதையொட்டி தடுப்பூசி செலுத்தாத மாணவர்கள் கல்லூரிக்கு வர அனுமதி இல்லை என்று ஊட்டி கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஊட்டி,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. ஆன்லைன் மூலம் மாணவர்கள் வீடுகளில் இருந்தபடியே பாடங்களை படித்து வந்தனர். ஊரடங்கு தளர்வை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகிறது.

 அதன்படி நீலகிரி மாவட்டத்தில் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குகிறது. முழு ஊரடங்குக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்படுவதால் அரசு உயர்நிலை பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தண்ணீர் தெளித்தும், கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு உள்ளது.

ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தரும் மாணவ-மாணவிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்வதற்காக சமூக இடைவெளி விட்டு நிற்க தரையில் வட்டங்கள் போடப்பட்டது. மாணவர்கள், ஆசிரியர்கள் கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள கிருமிநாசினி வழங்கும் எந்திரம் பொருத்தி சோதனை செய்யப்பட்டது. 

ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் சமூக இடைவெளி விட்டு அமர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆசிரியர்கள் அனைவரும் 2-வது டோஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி 4,200 ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இன்று திறப்பு

ஊரடங்கு தளர்வு காரணமாக ஊட்டி அரசு கலைக்கல்லூரி இன்று முதல் திறக்கப்படுகிறது. இளங்கலை 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு, முதுகலை 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நேரடியாக தொடங்குகிறது. கல்லூரி மாணவ-மாணவிகள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி கல்லூரிக்கு வருகை தரும் மாணவ-மாணவிகள் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்ற சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படும். தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் கல்லூரிக்கு வர அனுமதி இல்லை என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கல்லூரி மாணவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதால் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

Next Story