ஜெயலலிதா பல்கலைக்கழகம் நீக்கப்பட்டதை எதிர்த்து திண்டுக்கல்லில் மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் கைது
ஜெயலலிதா பல்கலைக்கழகம் நீக்கப்பட்டதை எதிர்த்து திண்டுக்கல்லில் மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்:
ஜெயலலிதா பெயரில் அமைந்த பல்கலைக்கழகத்தை நீக்குவதற்கான சட்டமுன் வடிவு தமிழக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இதை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன்படி திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திண்டுக்கல்-திருச்சி சாலையில் கல்லறை தோட்டம் அருகே சாலை மறியல் நடந்தது. இதற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பாரதிமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, சுப்பிரமணி, முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னம்பட்டி பழனிசாமி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வி.டி.ராஜன், மாவட்ட நிர்வாகிகள் பிரபுராம், ஜெயராமன், ரவிக்குமார், முன்னாள் ஆவின் தலைவர் திவான்பாட்சா, நகர கூட்டுறவு வங்கி தலைவர் பிரேம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது ஜெயலலிதா பல்கலைக்கழகம் நீக்கப்பட்டது மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷமிட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட நிர்வாகிகள் உள்பட அ.தி.மு.க.வினர் 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story