சுவாமி-அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை


சுவாமி-அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை
x
தினத்தந்தி 31 Aug 2021 10:32 PM IST (Updated: 31 Aug 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழாவின் 5-ம் நாளான நேற்று சுவாமி-அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடந்தது.

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழாவின் 5-ம் நாளான நேற்று சுவாமி-அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடந்தது. 

ஆவணித்திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 27-ந் தேதி ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் 10-ம் திருநாள் (5-ந்தேதி) வரை கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படவில்லை.

திருவிழா நாட்களில் தினமும் சுவாமி குமரவிடங்கபெருமானும், வள்ளியம்பாளும் காலை மற்றும் மாலையில் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் உலா வருகின்றனர். அதேபோல் காலை மற்றும் மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி கோவில் கிரிபிரகாரத்தில் உலா வந்து கோவிலுக்குள் செல்கின்றனர். 

குடவருவாயில் தீபாராதனை

5-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடந்தது. காலையில் சுவாமி குமரவிடங்கபெருமான் - வள்ளியம்பாள் எழுந்தருளல், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.

மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி கிரிபிரகாரத்தில் உலா வந்து கோவிலுக்குள் சென்றனர். பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி குமரவிடங்கபெருமானும், வள்ளியம்பாளும் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடந்தது. எதிரே நின்ற சுவாமி ஜெயந்திநாதருக்கு எதிர் சேவை தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமியும், வள்ளியம்பாளும் கோவில் உள்பிரகாரத்தில் உலா வந்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர். 

Next Story