பாதுகாப்பு வழங்க கோரி போலீஸ் சூப்பிரண்டுக்கு சயான் மனு


பாதுகாப்பு வழங்க கோரி போலீஸ் சூப்பிரண்டுக்கு சயான் மனு
x
தினத்தந்தி 31 Aug 2021 10:35 PM IST (Updated: 31 Aug 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

பாதுகாப்பு வழங்க கோரி போலீஸ் சூப்பிரண்டுக்கு சயான் மனு

ஊட்டி

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜாமீனில் உள்ள சயான் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி போலீஸ் சூப்பிரண்டுக்கு மனு அனுப்பி உள்ளார்.

கோடநாடு வழக்கு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.

 மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த வழக்கில் சயான், மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே ஊட்டி நீதிமன்றத்தில் அனுமதி பெற்று கடந்த 17-ந் தேதி சயானிடம் போலீசார் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றனர். இதேபோல விபத்தில் இறந்த கனகராஜின் அண்ணன் தனபாலிடம் விசாரணை நடத்தப்பட்டது.

நாளை விசாரணை

தொடர்ந்து நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் ஆகியோர் கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தன்று கோத்தகிரி, கோடநாடு மற்றும் கூடலூரில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் பெண் இன்ஸ்பெக்டர், 2 சப்- இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசாரிடம் 2 நாட்கள் விசாரணை நடத்தினர்.

 மேலும் வழக்கு தொடர்பாக சிலரிடம் ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஊட்டி கோர்ட்டில் நாளை (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது. 

அன்று கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் விசாரணை நடக்க உள்ளது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தடயவியல் நிபுணர் ராஜ்மோகன், 4-ந் தேதி மின்வாரிய உதவி பொறியாளர் ஆகிய 3 பேரிடம் கோர்ட்டில் விசாரணை நடைபெற இருக்கிறது.

பாதுகாப்பு கேட்டு சயான் மனு 

இந்த நிலையில் நேற்று நிபந்தனை ஜாமீன்படி சயான் ஊட்டி கோர்ட்டில் கையெழுத்து போட வந்தார். சமீபத்தில் அவர் ரகசிய வாக்குமூலம் போலீசாரிடம் அளித்ததால், தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.

 எனவே, போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நீலகிரி போலீஸ் சூப்பிரண்டுக்கு தபால் மூலம் மனு அனுப்பி உள்ளார். ஆனால் இதுவரை அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வில்லை. 

Next Story