இன்று 496 பள்ளிக்கூடங்கள் திறப்பு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை


இன்று 496 பள்ளிக்கூடங்கள் திறப்பு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 31 Aug 2021 5:31 PM GMT (Updated: 31 Aug 2021 5:31 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் 496 பள்ளிக்கூடங்கள் இன்று (புதன்கிழமை) திறக்கப்படுகின்றன. இதையொட்டி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடலூர், 

பள்ளிக்கூடங்கள் திறப்பு

கொரோனா வைரஸ் 2-வது அலை பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டன. தற்போது கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்து வருவதால், செப்டம்பர் 1-ந் தேதி (அதாவது இன்று) முதல் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து முன்னேற்பாடு பணிகளில் பள்ளி கல்வித்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதோடு, பள்ளிக்கூடங்கள் திறப்பதையொட்டி நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிக்கூடங்களை திறப்பது தொடர்பாக அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள் அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.

தூய்மை பணி

இதையடுத்து இன்று (புதன்கிழமை) பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட உள்ள நிலையில், அனைத்து பள்ளிகளையும் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணி நேற்று தீவிரமாக நடைபெற்றது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், பகுதிநேர நிதி உதவி பள்ளிகள், சிறப்பு பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என 496 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களும் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், நேற்று பள்ளி வகுப்பறைகள், கழிவறை, குடிநீர் தொட்டிகள் மற்றும் வளாகம் உள்ளிட்டவை பள்ளியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை கொண்டு கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.

20 மாணவர்களுக்கு அனுமதி

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி கூறுகையில், மாவட்டத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 496 பள்ளிக்கூடங்கள் இன்று திறக்கப்படுகின்றன.அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே இருக்க அனுமதிக்கப்படுவார்கள். மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் பள்ளி வளாகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும்.
பள்ளிக்கூடங்களில் மாணவ- மாணவிகள் கை கழுவுவதற்கு ஏதுவாக சோப்பும், தண்ணீரும் இருக்க வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய ஒவ்வொரு வகுப்பறையிலும் சானிடைசரை போதுமான அளவில் வைத்திருக்க வேண்டும். மாணவ- மாணவிகள் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும், மாணவர்கள் சிற்றுண்டி, மதிய உணவு இடைவேளையின்போது குழுக்களாக ஒன்றாக அமருவதை அனுமதிக்கக்கூடாது.

நடவடிக்கை

மேலும் மாணவர்களுக்கு பாதுகாப்பான, சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதோடு, அவர்கள் சொந்த பாட்டில்களில் தண்ணீர் கொண்டு வருவதை ஊக்கப்படுத்த வேண்டும். இதையெல்லாம் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story