பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கலை கண்டித்து அரசு பஸ்களை தாமதமாக இயக்கி போராட்டம்
பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கலை கண்டித்து அரசு பஸ்களை தாமதமாக இயக்கி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்:
போக்குவரத்து, காப்பீடு, ரெயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது என்று பல்வேறு தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் நேற்று அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பஸ்களை தாமதமாக இயக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டுக்கல், பழனி, வேடசந்தூர் உள்பட மொத்தம் 9 பணிமனைகள் மூலம் 500-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் அனைத்தும் நேற்று அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை இயக்கப்படவில்லை. இதனால் அதிகாலை பஸ்களை எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் சிரமப்பட்டனர். அதேநேரம் தனியார் பஸ்கள் வழக்கம் போல் மாவட்டம் முழுவதும் இயக்கப்பட்டன.
இதற்கிடையே மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு பணிமனைகள் முன்பு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திண்டுக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிற்சங்கத்தின் திண்டுக்கல் பொதுச்செயலாளர் ராமநாதன், தொ.மு.ச. பொது செயலாளர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் சாலை பாதுகாப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story