பண்ருட்டி அருகே திருமணம் செய்துகொள்வதாக கூறி பெண்ணிடம் ரூ.12 லட்சம் மோசடி
விழுப்புரம் தனியார் நிதி நிறுவன மேலாளர் கைது
பண்ருட்டி,
விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அடுத்த சின்னக்குப்பத்தை சேர்ந்தவர் தயாளன் மகன் ஆனந்தராஜ் (வயது 24). விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தை சேர்ந்த 34 வயது பெண் ஒருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆனந்தராஜ் அந்த இளம்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, அவரிடம் பல தவணைகளில் ரூ.12 லட்சம் வரை பணம் பெற்றாக தெரிகிறது. மேலும் அந்த பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஆனந்தராஜை வற்புறுத்தினார். அதற்கு ஆனந்தராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். உடனே அந்த பெண் தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தராஜ், அந்த பெண்ணை ஆபாசமாக திட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து ஆனந்தராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story