கொல்லிமலை வியூ பாயிண்டில் ஆபத்தை உணராமல் தடுப்பு சுவரை தாண்டி இயற்கையை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்


கொல்லிமலை வியூ பாயிண்டில் ஆபத்தை உணராமல் தடுப்பு சுவரை தாண்டி இயற்கையை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 1 Sept 2021 12:53 AM IST (Updated: 1 Sept 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

கொல்லிமலை வியூ பாயிண்ட்டில் ஆபத்தை உணராமல் தடுப்பு சுவரை தாண்டி இயற்கை அழகை சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர்.

சேந்தமங்கலம்:
கொல்லிமலை
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு, அங்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையொட்டி கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு போலீசார், வனத்துறையினர் தடுப்புகள் அமைத்து கண்காணித்தனர். 
இதனிடையே தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொல்லிமலைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் கொல்லிமலையில் தற்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் குவிந்து வருகிறார்கள்.
ஆபத்தை உணராமல்
அவர்கள் கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். பின்னர் செம்மேடு அருகே வனப்பகுதியில் உள்ள சீக்குப்பாறை பட்டி வியூ பாயிண்டுக்கு செல்கின்றனர். அங்கிருந்து இயற்கையின் அழகை கண்டு ரசிக்க முடியும் என்பதால் சுற்றுலா பயணிகள் அனைவரும் அங்கு செல்வதற்கு தவறுவதில்லை.
ஆனால் இதில் சில சுற்றுலா பயணிகள் தடுப்பு சுவரை தாண்டி ஆபத்தை உணராமல் பாறைகளில் அமர்ந்து செல்லி எடுத்து மகிழ்கிறார்கள். மேலும் தங்களது குடும்பத்தினர், நண்பர்களுடன் அங்கு அமர்ந்து இயற்கை அழகை ரசிக்கிறார்கள். இதனால் ஏதேனும் விபரீதம் நடைபெற வாய்ப்புள்ளது. 
கோரிக்கை
எனவே தடுப்பு சுவரை தாண்டும் சுற்றுலா பயணிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கொல்லிமலை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story