மைசூரு மாணவி கற்பழிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது


மைசூரு மாணவி கற்பழிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 1 Sept 2021 1:43 AM IST (Updated: 1 Sept 2021 1:43 AM IST)
t-max-icont-min-icon

மைசூரு மாணவி கற்பழிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைதாகி உள்ளார். அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

பெங்களூரு: 

மாணவி கற்பழிப்பு

  மைசூரு அருகே சாமுண்டிமலை அடிவாரத்தில் லலிதாதிரிபுரா பகுதி உள்ளது. மராட்டியத்தை சேர்ந்த இளம்பெண் மைசூருவில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்த 26-ந்தேதி தனது காதலனுடன் லலிதாதிரிபுரா பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 6-க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல், அவர்களை தடுத்து நிறுத்தி ரூ.4 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

  அப்போது இளம்பெண்ணும், அவரது காதலனும் பணம் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் காதலனை தாக்கிய மர்மநபர்கள், கல்லூரி மாணவியை அருகில் உள்ள புதருக்குள் தூக்கிச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச்சென்றனர்.

5 பேர் கைது

  இதுதொடர்பாக மைசூரு ஆலனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. 

இதையடுத்து அவர்கள் 5 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களை தற்போது 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். மேலும் நேற்று முன்தினம் சம்பவம் நடந்த இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

தனிப்படை அமைப்பு

  அப்போது அவர்கள் இளம்பெண்ணை பலாத்காரம் செய்தது குறித்து போலீசார் முன்பு நடித்துக் காட்டினர். அதை போலீசார் வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டனர். இந்த நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது மொத்தம் 7 பேர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. 

இதையடுத்து தலைமறைவாக உள்ள 2 பேரையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினர் 3 குழுக்களாக பிரிந்து தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் முகாமிட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

ரகசிய இடத்தில் விசாரணை

  இந்த நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக நேற்று முன்தினம் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவர் தமிழ்நாடு , திருப்பூர் மவாட்டம் அவினாசியை சேர்ந்தவர் ஆவார். இதன்மூலம் இச்சம்பவத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. கைதானவரை போலீசார் தமிழ்நாட்டில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி மைசூருவுக்கு நேற்று அழைத்து வந்தனர். 

அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருவதாகவும், விரைவில் அவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
  தலைமறைவாக உள்ள இன்னொருவரை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Next Story