கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுரை


கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுரை
x
தினத்தந்தி 1 Sept 2021 2:20 AM IST (Updated: 1 Sept 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் இன்று (புதன்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி கொரோனா விதிமுறைகளை மாணவர்கள் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது.

கரூர்,
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் இன்று (புதன்கிழமை) முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் கரூர், குளித்தலை ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக இந்த 2 கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது கொரோனா குறைந்து வருவதால், கரூரில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் நேரடி வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது.
சுத்தம் செய்யும் பணி
இதையடுத்து கரூரில் உள்ள நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நொய்யலில் உள்ள பெரியார் ஈவேரா அரசினர் மேல்நிலைப்பள்ளி, நடையனூரில் உள்ள அரசு உதவி பெறும் அரங்கசாமி கவுண்டர் மேல்நிலைப்பள்ளி, புன்னம் பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப்பள்ளி, புகளூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் வகுப்பறைகளில் இருக்கைகள், மேஜைகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அதேபோன்று பள்ளிகளில் ஒரு வகுப்பறையில் 20 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால், வகுப்பறைகளில் மேஜைகளை ஒழுங்குபடுத்தும் பணியும், பள்ளிகளை சுற்றிலும் புதர்களை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியும் நடந்தது. கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்றது.
மாணவர்களுக்கு விழிப்புணர்வு
பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி கரூர் பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிருமிநாசினி எந்திரம் பொருத்தும் பணி நடைபெற்றது. பள்ளியின் நுழைவு வாயிலில் கட்டாயம் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்ற பதாகையும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளியில் உள்ள சுவரில் முககவசம் நம் உயிர் கவசம் என்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் வகையில் ஓவியம் வரையப்பட்டது.  அதேபோல் கரூர் நகர்மன்ற குமரன் உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களே வருக என்ற வாசகமும், கொரோனா விழிப்புணர்வு வாசகமும் எழுதப்பட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story