கர்நாடகத்தில் 80 சதவீத என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு வேலை இல்லை - டி.கே.சிவக்குமார்


கர்நாடகத்தில் 80 சதவீத என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு வேலை இல்லை - டி.கே.சிவக்குமார்
x
தினத்தந்தி 31 Aug 2021 8:51 PM GMT (Updated: 31 Aug 2021 8:51 PM GMT)

கர்நாடகத்தில் 80 சதவீத என்ஜினீயரிங் பட்டதாரிகள் வேலை இல்லாமல் உள்ளனர் என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூரு:

கற்பழிப்பு சம்பவங்கள்

  காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான என்.எஸ்.யு.ஐ. தலைவராக கீர்த்தி கணேஷ் பதவி ஏற்பு விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

  பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக கூறினார். ஆனால் இருந்த வேலைகளும் பறிபோய்விட்டன. வேலை இழந்தவர்கள் தங்களின் பட்ட சான்றிதழ்களை பிரதமர், முதல்-மந்திரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதற்காக வேலை இழந்தவர்கள் போராட்டம் நடத்த வேண்டும். கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு வந்த பிறகு கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்துவிட்டன.

காங்கிரசார் போராட்டம்

  பெரிய நபர்கள் கற்பழிப்பில் ஈடுபடுகிறார்கள். மைசூரு பல்கலைக்கழக துணைவேந்தர் மாணவிகள் மாலை 6.30 மணிக்கு மேல் பொது வெளியில் நடமாடக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும். இந்த உத்தரவுக்கு எதிராக மாணவர் காங்கிரசார் போராட்டம் நடத்த வேண்டும். நாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் அது மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களால் தான் முடியும். கர்நாடகத்தில் 80 என்ஜினீயரிங் பட்டதாரிகள் வேலை இல்லாமல் உள்ளனர்.

  கர்நாடகத்தில் 200 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. தொழில்நுட்பத்தின் மையமாக கர்நாடகம் திகழ்கிறது. ஆனால் இங்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக உள்ளது.
  இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
  இந்த நிகழ்ச்சியில் சித்தராமையா உள்பட காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story