அரிமளத்தில் உள்ள தைல மரக்காடுகளை அழிக்கக்கோரி பஸ் மறியல்
அரிமளத்தில் உள்ள தைல மரக்காடுகளை அழிக்கக்கோரி பஸ் மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது
அரிமளம்
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியில் பல்வேறு இடங்களில் வனத்துறைக்கு சொந்தமான காடுகளில் தைல மரங்கள் அதிகளவு உள்ளன.
இதன்மூலம் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாகவும், ஆகவே இப்பகுதியில் உள்ள தைல மரங்களை முற்றிலுமாக அழித்து சமூக காடுகளாக்கி வன விலங்குகள் வாழ வழிவகை செய்ய வேண்டும். அரிமளம் வனப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் தடுப்பணைகளை அகற்றி மழைநீர் தேங்கு குழிகளை இயற்கை மழைநீர் வழித் தடத்துடன் இணைக்க வேண்டும். அரிமளத்தை ஒட்டிய வனப்பகுதியில் நடைபெற்று வரும் உழவு பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
பேரூராட்சி குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காவண்ணம் வடிகால் வசதியினை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அரிமளம் பகுதியில் வனத்துறை மற்றும் வனத் தோட்டக் கழகத்தின் மக்கள் விரோத போக்கை கண்டித்து அரிமளம் 8-ம் மண்டகப்படியில் நேற்று பஸ் மறியல் போராட்டம் நடைபெற்றது.
கடையடைப்பு
இந்த போராட்டத்தில் அனைத்து கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், வணிகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். அதற்கு பொதுமக்கள் தரப்பில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த முன் வராததால் கலைந்து செல்ல மாட்டோம், மாவட்ட உயர் அதிகாரிகள் வந்து உத்தரவாதம் அளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்று அடைத்தனர்.
இதனை கண்டித்தும், தைல மரக் காடுகளை அழிக்கக் கோரியும் அரிமளம் பேரூராட்சி முழுவதும் வியாபாரிகள் தாமாக முன் வந்து கடைகளை அடைத்தனர். இதனால் அரிமளம் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.
Related Tags :
Next Story