பத்மநேரி ஊராட்சியை களக்காடு நகராட்சியுடன் இணைக்கக்கூடாது- கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு
பத்மநேரி ஊராட்சியை களக்காடு நகராட்சியுடன் இணைக்கக்கூடாது என்று கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
நெல்லை:
பத்மநேரி ஊராட்சியை களக்காடு நகராட்சியுடன் இணைக்கக்கூடாது என்று கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
களக்காடு நகராட்சி
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
களக்காடு அருகே உள்ள பத்மநேரி ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அதில் கூறி இருப்பதாவது:-
களக்காடு யூனியனுக்கு உட்பட்ட பத்மநேரி ஊராட்சி இயற்கை எழில் சூழ்ந்த வடக்கு பச்சையாறு உள்ளடக்கிய விவசாய பகுதி ஆகும். களக்காடு புலிகள் காப்பகத்துக்கு இதயமாக திகழக்கூடிய அமைப்பு கொண்ட இந்த ஊராட்சியில் கீழ்வடகரை, மேலவடகரை, காமராஜ் நகர், வி.கே.நகர் மற்றும் பத்மநேரி கஸ்பா ஆகிய ஊர்கள் உள்ளன.
இந்த நிலையில் களக்காடு பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி பத்மநேரி ஊராட்சியை களக்காடு நகராட்சியோடு இணைக்க முயற்சிகள் நடக்கிறது. இவ்வாறு இணைக்கப்பட்டால், கிராம பகுதியில் வசிக்கும் எங்களுக்கு தேசிய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு மறுக்கப்படும். இந்த வேலை வாய்ப்பை நம்பி ஏராளமான குடும்பங்கள் இருக்கிறோம். ஏழைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே பத்மநேரி ஊராட்சியை, புதிதாக உருவாக்கப்படும் களக்காடு நகராட்சியுடன் சேர்க்கக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தசரா திருவிழா
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-
பாளையங்கோட்டை பகுதியில் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அப்போது பல்வேறு பகுதியில் இருந்து 12 அம்மன் சப்பரங்கள் அணிவகுத்து வரும். பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் இந்த சப்பரங்கள் அணிவகுத்து நிற்கும். இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்து விட்டதால் வருகிற அக்டோபர் மாதம் தசரா திருவிழா நடத்த அனுமதி அளிக்க வேண்டும். மேலும் அம்மன் சப்பரங்கள் அணிவகுத்து நிற்கும் மார்க்கெட் திடலில் மாநகராட்சி தற்காலிக கடைகள் கட்டக்கூடாது. அதற்கு மாற்றாக அருகில் உள்ள பள்ளிக்கூட மைதானங்களில் தற்காலிக கடைகள் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.
அமலை செடிகள்
தென்பத்து முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராஜேந்திரன் தலைமையில் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், 'மானூர் யூனியனுக்கு உட்பட்ட தென்பத்து ஊராட்சி பகுதியில் மக்கள் தொகை 4,500-க்கும் மேல் உள்ளது. எங்கள் பகுதி பாசன கால்வாயில் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமலை செடிகள் அடர்ந்து நீர்வரத்துக்கு தடையாக உள்ளது. இதனால் 480 ஏக்கர் நிலம் பாசன வசதி பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அமலை செடிகளை அகற்ற வேண்டும்' என்று கூறப்பட்டு உள்ளது.
வீட்டுமனை பட்டா
தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசு, செய்தி தொடர்பாளர் வளவன், கரும்புலி குயிலி பேரவை தச்சை மாடத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் முத்துவளவன் ஆகியோர் தலைமையில் வன்னிக்கோனேந்தல், பன்னீருத்து, செட்டிக்குறிச்சி, பாளையஞ்செட்டிகுளம் எம்.ஜி.ஆர். நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த பெண்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
அவர்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.
ச.ம.க.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தென் மண்டல செயலாளர் சுந்தர், நெல்லை மாவட்ட பொறுப்பாளர் நட்சத்திர வெற்றி, பகுதி செயலாளர் அழகேசராஜா உள்ளிட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், ‘‘நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து பாறைகளை உடைத்து சட்ட விரோதமாக கனிமவளங்களை கேரளாவுக்கு வாகனங்களில் தொடர்ந்து கடத்தி செல்கிறார்கள்.
இதனால் வருங்காலத்தில் மலைகள் இன்றி, மழை இன்றி நீர்ஆதாரம் பாதிக்கப்பட்டு பாைலவனம் ஆகி விடும். எனவே கனிமவளங்களை கேரளாவுக்கு கடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்’’ என்று கூறப்பட்டு உள்ளது.
இதேபோல் பல்வேறு தரப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
Related Tags :
Next Story