குமரியில் இன்று பள்ளி- கல்லூரிகள் திறப்பு


குமரியில் இன்று பள்ளி- கல்லூரிகள் திறப்பு
x
தினத்தந்தி 1 Sept 2021 3:06 AM IST (Updated: 1 Sept 2021 3:06 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று திறக்கப்படும் நிலையில் முன்னேற்பாடு பணிகளை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் ராமசாமி ஆய்வு செய்தார்.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று திறக்கப்படும் நிலையில் முன்னேற்பாடு பணிகளை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் ராமசாமி ஆய்வு செய்தார்.
பள்ளி, கல்லூரிகள்
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக கடந்த பல மாதங்களாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்கள் மூடப்பட்டன. எனினும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்தன. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால் கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் 1-ந் தேதி (அதாவது இன்று) முதல் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதில் பள்ளிகளை பொறுத்த வரையில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்புகள் வரை மட்டும் தொடங்கப்பட உள்ளது. மேலும் வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணவர்கள் மட்டும் சமூக இடைவெளியை பின்பற்றி அமர வைக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டு உள்ளது. அதோடு மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் மாணவர்களுக்கு நாள்தோறும் உடல் வெப்பநிலை கண்காணித்து அதை உரிய பதிவேட்டில் பராமரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. முக்கியமாக ஆசிரியர்கள், ஆசிரியைகள் கட்டாயம் 2 கட்ட தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இன்று திறப்பு
இவ்வாறு பல்வேறு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் இன்று (புதன்கிழமை) திறக்கப்பட உள்ளன. இதே போல குமரி மாவட்டத்திலும் பள்ளிகள், கல்லூரிகள் இன்று முதல் செயல்பட இருக்கின்றன. குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் 480-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். அவர்கள் அனைவருமே இன்று பள்ளிக்கு வருகை தர உள்ளனர்.
இதையொட்டி அனைத்து பள்ளிகளிலும் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக செய்யப்பட்டு உள்ளன. அதாவது சமூக இடைவெளியை பின்பற்றி மேஜை மற்றும் நாற்காலிகள் போடப்பட்டு உள்ளன. பள்ளி வளாகத்தில் வளர்ந்திருந்த செடி, கொடிகள் வெட்டி அகற்றப்பட்டன. மேலும் அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளை சுத்தம் செய்து கிருமிநாசினி தெளிக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது.
கலெக்டர் உத்தரவு
கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வரும் மாணவ-மாணவிகள் கட்டாயம் 2 கட்ட தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று அல்லது கொரோனா பரிசோதனை சான்று சமர்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்று கலெக்டர் அரவிந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கேரள மாநிலத்தில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வரும் மாணவர்கள் கண்டிப்பாக சான்றிதழ் சமர்ப்பித்த பிறகே அனுமதிக்கப்படுவர். அனைத்து கல்லூரி முதல்வர்களும் இதை முறையாக கண்காணித்து உறுதிபடுத்த வேண்டும். பள்ளிகளை பொறுத்த வரையில் கேரளாவில் இருந்து குமரி மாவட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து ஆன்லைன் மூலம் பாடம் நடத்த சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே கேரள மாநிலத்தில் இருந்து குமரி மாவட்டத்துக்கு கல்வி பயில பள்ளிகளுக்கு மாணவர்கள் வரவேண்டாம்" என்று கூறப்பட்டுள்ளது.
இணை இயக்குனர் ஆய்வு
இந்த நிலையில் பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் ராமசாமி நேற்று குமரி மாவட்டம் வந்தார். இவர் நாகர்கோவில் உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தார். இதேபோல் நாகர்கோவில் மாநகராட்சிக்கு  உட்பட்ட பள்ளிகளில் மாநகர் நல அதிகாரி விஜய் சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடைமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்வதற்காக 48 கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

Next Story