ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு: சேலத்தில் அ.தி.மு.க.வினர் சாலைமறியல்


ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு: சேலத்தில் அ.தி.மு.க.வினர் சாலைமறியல்
x
தினத்தந்தி 1 Sept 2021 4:18 AM IST (Updated: 1 Sept 2021 4:18 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை, அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

சேலம்:
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை, அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
ஜெயலலிதா பல்கலைக்கழகம்
விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை, அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான சட்ட திருத்த தீர்மானம் நேற்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் மறியல் மற்றும் போராட்டம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜி.வெங்கடாஜலம் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் செம்மலை, முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோஷங்கள் எழுப்பினர்
தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்க கூடாது என்று கூறி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அங்கு கூடியிருந்த அ.தி.மு.க.வினர் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பிறகு அ.தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சம்பவ இடத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜு, சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story