சேலத்தில் பெண் கொலை: ‘குடும்பம் நடத்த வர மறுத்ததால் திராவகம் வீசி கொன்றேன்’-கைதான மாநகராட்சி ஊழியர் பரபரப்பு வாக்குமூலம்


சேலத்தில் பெண் கொலை: ‘குடும்பம் நடத்த வர மறுத்ததால் திராவகம் வீசி கொன்றேன்’-கைதான மாநகராட்சி ஊழியர் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 31 Aug 2021 10:54 PM GMT (Updated: 31 Aug 2021 10:54 PM GMT)

சேலத்தில் குடும்பம் நடத்த வர மறுத்ததால் திராவகம் வீசி மனைவியை கொன்றேன் என்று கைதான மாநகராட்சி ஊழியர் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.

சேலம்:
சேலத்தில் குடும்பம் நடத்த வர மறுத்ததால் திராவகம் வீசி மனைவியை கொன்றேன் என்று கைதான மாநகராட்சி ஊழியர் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.
மாநகராட்சி ஊழியர்
சேலம் குகை ஜவுளிக்கடை பஸ் நிறுத்தம் பகுதியை சோந்தவர் ஏசுதாஸ் (வயது 52). இவர் சேலம் மாநகராட்சியில் கொசுமருந்து அடிக்கும் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், நாமக்கல் மாவட்டம் வையப்பமலை பகுதியை சேர்ந்த ரேவதி (47) என்பவருக்கும் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சில நேரங்களில் குடும்ப சண்டை ஏற்படும் போது ஏசுதாஸ் மனைவி ரேவதியை தாக்கி உள்ளார். இதனால் ரேவதி சேலம் அனைத்து மகளிர் போலீசில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவர் தன்னை தாக்குகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்து இருந்தார். மேலும் அவர் கணவரை பிரிந்து வையப்பமலையில் உள்ள பெற்றோர் வீட்டில்  வசித்து வந்தார்.
திராவகம் வீசி கொலை
இந்த நிலையில் இந்த புகார் தொடர்பான விசாரணைக்காக ரேவதி தனது தாய் ஆராயி (65) என்பவருடன் சேலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்து விட்டு ஊருக்கு செல்வதற்காக சேலம் பழைய பஸ் நிலையம் பகுதிக்கு வந்தார். அப்போது பின்னால் வந்த ஏசுதாஸ் ரேவதி மீது திராவகத்தை வீசி வீட்டு தப்பி சென்று விட்டார்.
இதில் முகம் உள்ளிட்ட உடலில் பல இடங்களில் வெந்து போன ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக  சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சேலம் டவுன் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ஏசுதாசை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஏசுதாஸ் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். இது குறித்து போலீசார் கூறியதாவது:-
குடும்பம் நடத்த வர மறுப்பு
ரேவதிக்கும், வையப்பமலை பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இதை ஏசுதாஸ் கண்டித்து உள்ளார். ஆனால் அவர் கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது. ஒரு கட்டத்தில் ஏசுதாசை பிரிந்து ரேவதி வையப்பமலைக்கு சென்றார். இதையடுத்து குடும்பம் நடத்த வருமாறு பலமுறை ரேவதியை அழைத்தும், அதற்கு அவர் மறுத்து உள்ளார். 
இந்த நிலையில் சேலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நடந்த விசாரணைக்காக வரும் போது,  கொலை செய்யும் நோக்கில் ஏசுதாஸ் வந்து உள்ளார். இதற்காக அவர் வீட்டில் இருந்து வரும் போதே திராவகத்தை வாங்கிக்கொண்டு வந்துள்ளார். போலீஸ் நிலையத்தில் விசாரணை நடந்த போது கூட, ஏசுதாஸ் தனது மனைவி ரேவதியை குடும்ப நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், மீண்டும் வையப்பமலை செல்ல பழைய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த மனைவி ரேவதி மீது திராவகத்தை வீசி கொன்றுள்ளார்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story