தலைவாசல் அருகே லாரி மீது அரசு விரைவு பஸ் மோதல்; டிரைவர் உள்பட 15 பேர் படுகாயம்


தலைவாசல் அருகே லாரி மீது அரசு விரைவு பஸ் மோதல்; டிரைவர் உள்பட 15 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 31 Aug 2021 10:58 PM GMT (Updated: 2021-09-01T04:28:18+05:30)

தலைவாசல் அருகே லாரி மீது அரசு விரைவு பஸ் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

தலைவாசல்;
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சம்பேரி பெட்ரோல் விற்பனை எதிரில் நேற்று அதிகாலை 5 மணிக்கு சாலையோரம் ஒரு டேங்கர் லாரியும், அதற்கு அருகில் சிமெண்டு பாரத்துடன் ஒரு லாரியும் நின்று கொண்டிருந்தன. அப்போது சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு விரைவு பஸ் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது உரசியதுடன், சிமெண்டு பாரத்துடன் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் அரசு பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. 
இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு இம்மானுவல் ஞானசேகர், தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு,  சப்-இன்ஸ்பெக்டர்கள் ஈஸ்வரன், கோபால் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பொக்லைன் எந்திரம் மூலம் அரசு பஸ் மீட்கப்பட்டது. விபத்தில் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த அரசு விரைவு பஸ் டிரைவர் பழனிசாமி (வயது 53), பஸ் கண்டக்டர் மாதையன் (35) மற்றும் பயணிகள் வீரநாராயணன், ரமேஷ், கீதா, பவித்ரா, சித்ரா அலெக்சாண்டர், ஞானபிரகாஷ், மணிகண்டன், அசோக்குமார், வள்ளல்பெருமாள், அமுல்தாஸ் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story