பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி பொங்க வகுப்புகளுக்கு வந்தனர்.
பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவமாணவிகள் மகிழ்ச்சி பொங்க வகுப்புகளுக்கு வந்தனர்.
திருப்பூர்:
சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி பொங்க வகுப்புகளுக்கு வந்தனர்.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதற்கிடையே மாணவ-மாணவிகளின் நலன் கருதி ஆன்லைனில் வகுப்புகளும் நடத்தப்பட்டன.
இதற்கிடையே கொரோனா தொற்று குறைந்த நிலையில், மீண்டும் பள்ளிகளை திறந்து செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதுபோல் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதன்படி நேற்று திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் திறந்து செயல்பட்டன.
வெப்ப பரிசோதனை
திருப்பூர் மாநகரில் ரெயில் நிலையம் அருகே உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு காலை மாணவிகள் பலர் வந்தனர். 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவிகள் பலரும் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். அரசு வழிகாட்டுதலின்படி வகுப்பறைகளில் மாணவிகள் அமர வைக்கப்பட்டிருந்தனர்.
முன்னதாக பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டது. இதுபோல் உடல் வெப்ப பரிசோதனையும் செய்யப்பட்டது. மேலும், முககவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு மாணவிகள் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்ததால் தங்களது மகிழ்ச்சியை கட்டியணைத்து வெளிப்படுத்தினர்.
கலெக்டர் ஆய்வு
இதுபோல் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் பலரும் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். இந்த மாணவர்களுக்கும் வெப்பரிசோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி வழங்கப்பட்டது. இதற்கிடையே இந்த பள்ளியை மாவட்ட கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார். பள்ளி அலுவலகத்திற்கு வந்த அவர் மாணவர்களின் வருகை மற்றும் தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள் விவரங்கள் அடங்கிய அறிக்கைகளை ஆய்வு செய்தார்.
மேலும், பள்ளி கட்டிடம் மற்றும் வகுப்பறைகளில் மாணவர்களுக்கு செய்யப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும், ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் கலெக்டர் ஆய்வு செய்தார். மாணவிகளும் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.
கல்லூரிகள்
இதற்கிடையே கல்லூரி சாலையில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி உள்பட பல்வேறு கல்லூரிகளும் நேற்று செயல்பட்ட தொடங்கின. இதற்கான முன்னேற்பாடுகளும் கல்லூரிகள் சார்பில் செய்யப்பட்டிருந்தன.
கல்லூரிகளிலும் சமூக இடைவெளியை பின்பற்றி மாணவ-மாணவிகள் அமரவைக்கப்பட்டனர். பேராசிரியர்களும் அவர்களுக்கு பாடம் நடத்தினர். மாணவ-மாணவிகளும் உற்சாகமாக பாடங்களை கவனித்தனர். அதிக எண்ணிக்கையில் மாணவ-மாணவிகள் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சுழற்சி முறையில் மாணவ-மாணவிகள் வரவழைக்கப்பட்டனர்.
மகிழ்ச்சி
பள்ளிகள் திறப்பு குறித்து மாணவ-மாணவிகள் கருத்து வருமாறு:-
ஜெய்வாபாய் பள்ளி 12-ம் வகுப்பு மாணவி பியாரிஷா கூறியதாவது:- நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆன்லைனில் பாடம் கவனிக்க, படிக்க மிகவும் சிரமமாக இருந்தது.
தற்போது நேரில் ஆசிரியர்கள் மூலம் பாடம் நடத்துவதன் மூலம் சுலமாக புரியும். அதிக மதிப்பெண்களும் எடுக்க முடியும். என்றார்.
12-ம் வகுப்பு மாணவி பிரியதர்ஷினி:- பள்ளிகள் திறக்கப்பட்டதால் தோழிகளை சந்தித்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து பள்ளிகள் திறந்து செயல்பட வேண்டும். மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டால் படிப்பதற்கு சிரமமாக இருக்கும். பள்ளிக்கு வந்து படிக்கவே மிகவும் ஆர்வமாக இருக்கிறது. என்றார்.
சந்தேகம் கேட்க எளிதாக...
11-ம் வகுப்பு மாணவி ஏஞ்சல் கூறியதாவது:-
பல மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு வந்தது மிகவும் உற்சாகமாக உள்ளது. வீட்டில் இருந்து ஆன்லைன் மூலமாக படிப்பதில் சிரமமாக இருந்தது. நேரடியாக பள்ளிக்கு வந்து படிக்கவே விரும்புகிறோம். என்றார்.
11-ம் வகுப்பு மாணவி நர்மதா கூறியதாவது:-
பள்ளிகள் திறக்கப்பட்டதால் நன்றாக இருக்கிறது. ஆன்லைன் வகுப்புகளில் சந்தேகம் கேட்க முடியாத ஒரு நிலை இருந்தது. ஆனால் பள்ளி திறக்கப்பட்ட நிலையில் சந்தேகம் கேட்க எளிதாக இருக்கும். என்றார்.
புது உணர்வு
நஞ்சப்பா ஆண்கள் பள்ளியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவன் வெற்றி செல்வன்:-
பள்ளிகள் திறக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. மீண்டும் நண்பர்களை சந்தித்தது புது உணர்வை தருகிறது. ஆன்லைன் வகுப்புகளில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. நேரடியாக வகுப்புகளில் பாடம் நடத்தப்படுவது கவனிப்பதற்கு சுலபமாக இருக்கும். அதிக மதிப்பெண்களும் பெற முடியும். வகுப்பறையில் இருந்து படிக்க மற்றும் பாடம் கவனிக்கவே விருப்பமாக உள்ளது. என்றார்.
12-ம் வகுப்பு மாணவன் வன்னியன் கூறியதாவது:-
ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் போது ஏராளமான இடர்பாடுகள் இருந்தது. இதனால் வகுப்புகளை கவனிக்கு முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக இணையதள பிரச்சினைகள் காரணமாக சரியாக கவனிக்க முடியாமல் இருந்தது.ஆனால் தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதால் நன்றாக பாடம் கவனிக்க முடியும். என்றார்.
குமரன் கல்லூரி
திருப்பூர் மங்கலம் சாலை குமரன் அரசு கலைக்கல்லூரியில் மாணவிகள் புது உற்சாகத்துடன் கல்லூரிக்கு வந்திருந்தனர். மாணவிகளை பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் வரவேற்று உரிய பாதுகாப்புடன் கல்லூரிகள் அனுப்பி வைத்தனர். மாணவிகளும் தங்கள் நண்பர்களை பார்த்து தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டதோடு, வகுப்பறையிலும் ஆர்வமாக படிப்பைத் தொடர்ந்தார். பல்லடம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வந்த மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதித்த பிறகே, உள்ளே செல்ல வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டார்கள்.
கல்லூரிகள் திறப்பு குறித்து சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த 2-ம் ஆண்டு மாணவி வனபார்வதி கூறியதாவது:- ஆன்லைன் வகுப்புகளில் சரியாக பாடங்களை கவனிக்க முடியவில்லை. பல்வேறு இடர்பாடுகள் இருந்து வருகிறது. மீண்டும் கல்லூரிகள் திறந்தது மகிழ்ச்சியளிக்கிறது.
தொடர்ந்து கல்லூரிகள் செயல்பட வேண்டும். கல்லூரிகளிலேயே வகுப்புகள் நடைபெற வேண்டும். என்றார்.
கல்லூரி 2-ம் ஆண்டு மாணவி சினேகா:- கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டது, தோழிகளை சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளது. ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்துவதால் சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை. நேரடியாக வகுப்புகள் நடைபெறுவதால் நன்றாக கவனிக்க முடியும். என்றார்.
Related Tags :
Next Story