கரும்புவெட்டும் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாததால் விரக்தி


கரும்புவெட்டும் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாததால் விரக்தி
x
தினத்தந்தி 1 Sep 2021 4:42 PM GMT (Updated: 2021-09-01T22:12:48+05:30)

திருக்கோவிலூர் அருகே காதலித்த பெண்ணை திருமணம்செய்ய முடியாத விரக்தியில் கரும்புவெட்டும் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

திருக்கோவிலூர்

5 ஆண்டுகளாக காதல்

திருக்கோவிலூர் அருகே உள்ள வீரட்டகரம் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரவேல் மகன் மணிகண்டன்(வயது 25). கரும்பு வெட்டும் தொழிலாளியான இவர் தன்னுடன் வேலை செய்து வந்த அதே ஊரை சேர்ந்த 22 வயது பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. 
இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மணிகண்டன் கரும்பு வெட்டும் வேலைக்காக கர்நாடக மாநிலம் மைசூருக்கு சென்றிருந்தார். இந்த வேளையில் தனது காதலிக்கு அவரது பெற்றோர் வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் நடத்த முடிவு செய்தனர்.

தற்கொலை

இதை அறிந்து சொந்த ஊருக்கு வந்த மணிகண்டன் காதலி வீட்டுக்கு சென்று அவரது பெற்றோரிடம் பெண் கேட்டார். அப்போது அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதோடு மணிகண்டனை திருமணம் செய்துகொள்ள அவரது  காதலியும் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. 
இதில் மனமுடைந்த மணிகண்டன் அவரது வீட்டுக்கு சென்று அறைக்கதவை தாழ்ப்பாள் போட்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்டநேரமாகியும் அறை கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த மணிகண்டனின் தாய் அமுதா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
அங்கு மணிகண்டன் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்ததை பார்த்து கதறி அழுதார். 

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசார் விரைந்து வந்து மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இது குறித்து மணிகண்டனின் தாய் அமுதா கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாததால் விரக்தி அடைந்து கரும்பு வெட்டும் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வீரட்டகரம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story