நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி
ஊட்டியில் ‘சீல்’ வைத்த கடைகளை திறக்கக்கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பெண்கள் உள்பட 420 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஊட்டி,
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் நேற்று 8-வது நாளாக கடைகள் மூடப்பட்டு இருந்தது. இதற்கிடையில் சீல் வைக்கப்பட்ட கடைகளை திறக்கக்கோரி வியாபாரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில் நேற்று ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் சீல் வைக்கப்பட்ட கடைகளை திறக்க வேண்டும், நீண்ட நாட்களாக நிலவி வரும் வாடகை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
முற்றுகையிட முயற்சி
இதையடுத்து மனிதநேய மக்கள் கட்சியினர் மற்றும் வியாபாரிகள் புளுமவுண்டன் சாலையில் ஒன்று திரண்டனர். பின்னர் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மேலும் சீலை அகற்றி கடைகளை திறந்து எங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று வியாபாரிகள் கோஷங்களை எழுப்பி வலியுறுத்தினர். தொடர்ந்து புளுமவுண்டன் சாலையில் இருந்து ஊர்வலமாக சென்று, ஊட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் முத்துமாணிக்கம், மோகன் நவாஸ், ஊட்டி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மனிதநேய மக்கள் கட்சியினர், வியாபாரிகளை தடுப்புகள் வைத்து தடுத்து நிறுத்தினர்.
420 பேர் கைது
பின்னர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்து அரசு பஸ்கள், போலீஸ் வேன்களில் ஏற்றி தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். இதில் 50 பெண்கள் உள்பட 420 பேரை போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, உயர்த்தப்பட்ட வாடகையை வரன்முறை படுத்த வேண்டும். சீல் வைக்கப்பட்ட கடைகளை திறந்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றனர். இந்த போராட்டம் காரணமாக ஊட்டியில் 2 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story